சென்ற வாரம் மெக்சிகோ நாட்டிற்கு விடுமுறையில் சென்ற போது மாயர்களின் கலாசாரம் பற்றிய பல தகவல்களையும் அவர்களது வரலாற்றில் சிறந்து விளங்கிய சிச்சன் இட்ஸா (Chichén Itzá) எனும் நகரத்தின் தொல்லியல் தளம் ஒன்றுக்கும் நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
கொலம்பஸ் அமெரிக்கக் கடற்கரையைப் போய்ச் சேர்ந்தது 1492-ம் ஆண்டு. அதற்கு முன்னர் வேற்று நாட்டவர்களின் தலையீடில்லாமல் அமெரிக்கக் கண்டத்தில் தழைத்தோங்கிய முக்கியக் கலாசாரங்களில் ஒன்று மாயன் கலாசாரம். மாயர்களின் தொல்லியல் எச்சங்கள் காணப்படும் நாடுகளில் மெக்சிகோவும் ஒன்றாகும்.
மெக்சிகோவில் பரவலாகக் காணப்படும் செனோட் எனப்படும் இயற்கையாக உருவாகும் ஆழ்கிணறுகளும் இவர்களது வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. அவை நீர் விநியோகத்திற்கு மட்டுமல்லாமல் அவர்களது சடங்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த செனோட் எனப்படும் ஆழ்கிணறுகள் உருவாவதற்குக் காரணம் சுண்ணாம்புக்கல் (limestone) பாறைகள் இயற்கையாகத் தகர்வதன் மூலம் நிலத்துக்கடியில் ஓடும் நீர் வெளியே தெரிவதாகும். ஆங்கிலத்தில் இதனை sinkhole என்றழைப்பார்கள். பொதுவாக கிணறு வெட்டும் போது நாம் கீழேயுள்ள நிலத்தடி நீரைக் காணும் வரை வெட்டுகிறோம். இந்த செனோட்கள் இயற்கையாக நீர்மட்டத்திற்கு மேலேயுள்ள நிலம் தகர்ந்து போவதால் உருவாகிற ஆழ்கிணறு. இயற்கையாகத் தோன்றுவதால் இவற்றின் தோற்றம், விட்டத்தின் அளவு போன்றவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. சிலவற்றில் குகைகளும் காணப்படுகின்றன.
Add Comment