9. காரியத் தடைகள்
1818ஆம் வருடம் டிசம்பர் மாதம் மதராஸ் மாகாண கவர்னர் தாமஸ் மன்றோ, சல்லிவனின் நீலமலை மலையேற்றத்திற்கு அனுமதி கொடுத்திருந்தார். திட்ட வரைவை அங்கீகரிப்பதாகவும், ஆறு மாதங்களுக்குள் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தார். பயணத்திற்கு சல்லிவன் கேட்டிருந்ததை விட நாற்பது சதவீதப் பணத்தைக் குறைத்துத்தான் அங்கீகரித்திருந்தார். ஜான் பாப்டிஸ்ட் லூயி, எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே மதராஸுக்கு வந்து சேர்ந்திருந்தார். மன்றோவுடனான அவருடைய சந்திப்பும் இந்தத் திட்ட ஒப்புதலை இன்னும் விரைவுபடுத்தியிருக்கலாம் என்று சல்லிவன் நினைத்தார்.
ஒருவாறாக இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த அவர், நவம்பரிலிருந்தே மலையேற்றத்துக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கியிருந்தார். ஆறு மாதங்கள் நேரமிருப்பதால், பனிக்காலம் முடிந்துதான் மலையேற்றத்திற்குத் திட்டமிடப்படும் என்று கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு இருந்தது. ஆனால் சல்லிவன் எதற்கும் காத்திருப்பவராகத் தெரியவில்லை. அவர் திட்டமிடும் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் அதிகாரிகள் திணறினர்.
முதலில் மலையேற்றத்துக்கு உதவக்கூடிய உள்ளூர் மனிதர்கள் சில நூறு பேராவது வேண்டும் என்றும் உடல் பலமும், மலைவாசிகள் மொழியும் தெரிந்த இளைஞர்கள் நூறு பேரைத் தேடிக்கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். உள்ளூர்க்காரர்களும், மலைவாசிகளும் இதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. மலையில் ஏறுபவர்களை நிச்சயம் வன தெய்வம் ஒருநாள் தண்டிக்கும் என்பதே அவர்களது அத்தனை நாளைய நம்பிக்கை. இப்போது விஷ்-கிண்டர்ஸ்லி மலையேற்றத்தின்போது உச்சியிலிருந்து விழுந்த நஞ்சனின் மரணம் அவர்களை உலுக்கியிருந்தது. தெய்வங்கள் இருப்பது உறுதி. அவை மலையேறுபவனை உயிரோடு திரும்ப அனுப்புவதில்லை என்பதும் திண்ணம். ஆகவே எங்களால் ஒருவரைக்கூட அனுப்பி வைக்கமுடியாது என்று ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
அவர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். மிரட்டப்பட்டார்கள். சிலர் அடிக்கப்பட்டார்கள். சிலர் தற்காலிகமாகச் சிறையில் கூட அடைக்கப்பட்டார்கள். ஆனால் உள்ளூர்வாசிகள் சற்றும் மசிவதாக இல்லை. எல்லாவற்றிலும் தெய்வத்தின் சாபம் பெரிது. இன்று உங்களுக்கு ஒத்துழைத்தால் எங்கள் சந்ததியே இல்லாமற்போய்விடும். நாங்கள் அதற்கு ஒருபோதும் இணங்கமாட்டோம் என்று கைவிரித்துவிட்டார்கள்.















Add Comment