09 – காலைச் சுற்றிய பாம்பு
சோவியத் நாடுகள் பிரிந்தபோதும், செச்சனியாவுக்குத் தனிக்குடியரசு அந்தஸ்து கொடுத்துத் தன்னுடனேயே வைத்துக்கொண்டது ரஷ்யா. செச்சனிய உள்நாட்டுப் புரட்சியில் அதிபரான ததேயெவ் (1991), ரஷ்யாவிலிருந்து விலகி, செச்சனியாவைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டார். இதனால் செச்சன்யா மீது படையெடுத்தார் எல்ஸின் (1994-1996). ததேயெவைக் கொன்று, கொரில்லா படைத்தலைவர் அஸ்லானோடு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. செச்சனியாவின் அந்தஸ்து அந்தரத்தில் தொங்கியது.
அதன் பிறகும் அங்கு ரஷ்ய எதிர்ப்பு தணியவில்லை. ரஷ்யாவுக்கு ஆதரவளித்த வேட்பாளர்கள், மாஸ்கோவிலிருந்து வந்த தூதர்கள் என அனைவரையும் கடத்திக் கொன்றார்கள். ரஷ்யப் படையுடன் மோதி, அருகிலிருந்த தகிஸ்தானைக் கைப்பற்றினார்கள்(1999). இஸ்லாமிய மதச் சட்டம் அமல்படுத்தப்பட இருந்தது. அங்கிருந்த சிறுபான்மையினருள் இஸ்லாமியச் சமூகத்தினரே அதிகம் இருந்தனர். ஆரம்பத்தில் இனப்போராட்டமாகத் தொடங்கியது, சுதந்தரம், பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று பல பரிமாணங்களை எடுத்து வளர்ந்துகொண்டே போனது. அமெரிக்க அதிபர் கிளிண்டனும் இதைத் தீவிரவாதச் செயல் என்று ஆமோதிக்க, இரண்டாம் செச்சனியப் போருக்குத் தயாரானது ரஷ்யா (1999).
செப்டம்பர் 4ஆம் தேதி (1999) தகிஸ்தானிலிருந்த ரஷ்யாவின் ராணுவக் குடியிருப்பில் குண்டு வெடித்தது. ஐந்து நாள்கள் கழித்து தென்கிழக்கு மாஸ்கோவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் இன்னொரு குண்டு வெடித்தது. களத்தைத் துப்பறிந்த ரஷ்யாவின் FSBஇடம் TNT, RDX போன்ற வெடிமருந்துகள் சிக்கின. சந்தேகமில்லாமல் இது தீவிரவாதிகளின் வேலைதான். இந்த மூன்றெழுத்து வெடிமருந்துக்கு உலகம் முழுக்க பெயர் போனவை அன்றைய தீவிரவாதக் கும்பல்கள்.















Add Comment