18. ஓர் ஏரி, ஓர் இரங்கல்
ஊட்டியில் சல்லிவனின் கல்வீடு எழுந்துகொண்டிருந்தது. அவர் திம்மட்டிக்கும், ஊட்டிக்கும், கோயம்புத்தூருக்குமாக தனது ஜாகையை மாற்றிக்கொண்டிருந்தார். சரி, ஊட்டி வசப்பட்டுவிட்டது. ஒரு வீடு எழுகிறது. தன் இடம் உறுதியாகிவிட்டது. தன் கனவான பிரிட்டிஷ் குடியேற்றத்தை இங்கு உருவாக்க அடுத்தடுத்த திட்டங்களில் அவர் ஈடுபடவேண்டும். என்னென்ன வேண்டும் என்று பட்டியல் போட்டார். வெறுமனே காலநிலை அள்ளுகிறது, வாருங்கள் என்று வாய்ப்பந்தல் போட்டால் பெட்டியும் படுக்கையும் கட்டிக்கொண்டு வந்து புல்வெளி மலைகளிலா உண்டு, உறங்க முடியும்? அடிப்படை வசதிகள் வேண்டாமா?
ஆங்கிலேயர்கள் சாதாரண வசதிகளில் கூட சொகுசு என்ற முன்னொட்டைச் சேர்த்தால்தான் திருப்தியடைவார்கள். முதலில் அடிப்படைகளைச் சரிசெய்யவேண்டும். குடியிருப்புகளும் அலுவலகங்களும் உருவாவதற்கான ஏற்பாடுகளைப் பார்க்கவேண்டும். பொழுதுபோக்கு? இங்கே எதற்குச் செயற்கையாகப் பொழுதைப் போக்கும் ஒரு விஷயம் தேவை? இந்தப் புல்வெளிகளும், உயர் சிகரங்களும், நீர் நிலைகளும், உருவாக்கப்படப்போகும் மலர்த்தோட்டங்களும் போதாதா? உனக்குப் போதும், மொத்த ஆங்கிலேயர்களின் மனநிலையை யோசி என்று அவரது தொலைநோக்கு மனசாட்சி சொன்னது.















Add Comment