25. குகை பூதம்
ரீகன்பெர்க் தன் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே தன் முன் இருக்கும் முக்கியத் தடையை உணர்ந்துகொண்டார். அது உள்ளூர் மக்களின் எதிர்ப்பு. வனத்தை இன்னும் இன்னும் அழித்துக்கொண்டே போகக்கூடாது, அது மலைத்தெய்வத்தின் கோபத்தைக் கொண்டு வரும் என்ற பழைய பல்லவி. பிரிட்டிஷ் இதற்கெல்லாம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாகப் பழகிப்போய், அதனை ஒரு பழைய பல்லவியாக மாற்றியிருந்தது. எங்கெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அதற்கேற்ற சிகிச்சையை சாம, தான, பேத, தண்ட முறைகளில் வழங்கிப் பழக்கப்பட்டிருந்தது.
குதிரைகள் மிரண்டு தானே ஓடி வீழ்ந்ததில் குதிரைக்காரனின் சூது இருந்ததைக் கண்டுபிடித்து அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரீகன்பெர்க்குக்கு மேலும் பாதுகாப்பும், போதுமான உதவியும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே உருவாக்கிய திட்டத்தை இன்னும் பண்படுத்திப் புதிய செயல்திட்டம் ஒன்றை உருவாக்கினார். ஏற்கெனவே கொடுத்திருந்த நான்கு லட்சம் பவுண்ட் பட்ஜெட்டை வெகுவாகக் குறைத்து 1,32,000 பவுண்டாக ஆக்கினார். இதற்குப் பிறகு பணிகள் நியாயமாக வேகமெடுத்திருக்கவேண்டும்.
ஆனால் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதலில் பெரும் சுணக்கங்கள் இருந்தன. தனியார் நிறுவனமாக இந்த ரயில் நிறுவனத்தை உருவாக்குவதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. ரீகன்பெர்க் நாளுக்கு நாள் புதுப்புது தேவைகளை உருவாக்கிக்கொண்டே போனார். அவருடைய பணிகளை மேற்பார்வையிட ரிச்சர்ட் வூலி (Richad Wooley) என்கிற பொறியாளர் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின.















Add Comment