109 காட்சிகள்
ராம் வீட்டில் ராமசாமியைப் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பும்போது ஷங்கர் ராமனிடம் இவன் கேட்டான், ‘எப்படி’ என்று.
அவன் சொன்னான், ‘சான்ஸே இல்ல. ஒண்ணு இவர் ரொம்ப ரொம்ப ஜெனுயின் பர்சனா இருக்கணும், இல்லாட்டி கம்ப்ளீட்டா பொய்யான ஆளா இருக்கணும். இப்படி ஒருத்தர் இருக்கமுடியுமானு பிரமிப்பா இருக்கு’ என்றான்.
நிறைய பேர் சுற்றி இருக்கையில் ராமசாமி ஜலதரங்கம் வாசிப்பவரைப்போல எல்லோருக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருப்பார் என்பது இவனுக்கும் கொஞ்சம் புதிதாகத்தான் இருந்தது, எப்போதுமே தனக்கே தனக்கான ராமசாமியாக அவரைத் தனியாக மட்டுமே பார்த்துப் பழகியிருந்தவன் என்பதால். அறைமுழுக்க, ராமசாமியின் நீண்ட நாள் நண்பர்கள், வாசகர்கள் என நிரம்பியிருந்தனர். அதில் சி மோகன் போன்ற சிலர், ஒன்று என்றால் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், நாம் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்கிற ராமசாமிதானே, பார்க்க வந்தவர்கள் பேசட்டும் என்று அமைதியாக அமர்ந்திருந்தனர். வந்த அனைவரிடமும் கொஞ்சமாவது பேசி அனுப்ப வேண்டும் என்பதில் குறியாய் இருப்பவரைப்போலப் பேசிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி. ஷங்கர் ராமன் முறை வந்தபோது, இவனைச் சுட்டிக்காட்டி, ‘இவ்வளவு பரபரப்பா இருக்கற இவருக்கு இவ்வளவு அமைதியா ஒரு நண்பரானு ஆச்சரியமா இருக்கில்லே’ என்று விளையாட்டாகச் சொல்ல, அதற்கு இவனை நன்கு தெரிந்தவர்கள் சிரித்ததில் இவனுக்கு குதூகலம் கலந்த வெட்கமாக ஆகிவிட்டது. ‘ஆனா இப்படி அமையற ஃப்ரெண்ட்ஷிப்தான் நிறைய பேர்கிட்ட லைஃப் டைமுக்கானதா இருக்கு’ என்று ஆரம்பித்து மெள்ளக் கிளம்பி வேகம் பிடிக்கும் மின்சார ரயிலைப்போல அவர் பாட்டுக்கும் பேசிக்கொண்டே போனார். அவருடைய சரளமான பேச்சு அதுவரை கேட்டிராத கோணத்தில், அட என்று ஆச்சரியப்படும்படியாக இருந்தது. பேசிக்கொண்டே இருந்தவர் ரொம்பப் பேசிவிட்டோமோ என்று கூச்சப்பட்டவரைப் போல மடையை சாத்திக்கொண்டு அமைதியாகிவிட்டார்.
Add Comment