110 பரிமாணம்
கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதற்குக் காரணம் தான்தான் என்றும் எண்ணிக்கொண்டான்.
நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தது கரி போடும் குமுட்டி அடுப்பைத்தான். அப்போது, பிராமணர் வீடுகளைத் தவிர பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் விறகு அடுப்புதான். இரண்டு வயதில் ஜட்டி கூடப் போடாமல் தூங்கி எழுந்ததும் பூரி மாமா வீட்டு குமுட்டி அடுப்பின் முன்னால்போய் குத்துக்காலிட்டபடி உட்கார்ந்திருந்ததுதான் (அம்மா திரும்பத்திரும்ப அவனிடம், அப்ப நீ அப்படிப் பண்ணுவே இப்படிப் பண்ணுவே என்று சொல்லியிருந்தவற்றில்) அவனிடம் தங்கியிருந்த முதல் நினைவு.
அப்பா யூடிசியாகப் பதவி உயர்வு பெற்று பாண்டிச்சேரிக்கு மாற்றலாகி வந்த பிறகுதான் திரி ஸ்டவ்வையே பார்த்தார்கள். வீட்டில் பல பேர் இருக்கும், பார்வைக்குப் பளபளப்பாக இரண்டு மூன்று அறைகள் இருக்கிற பள்ளி நண்பர்கள் பலரது வீடுகளில் – ரெழியில் வேலை பார்த்தவரின் மகனான சீனிவாசலூயியோ போல இங்கிலீஷ் ஸ்பெல்லிங் இருக்கிற நாயுடுவான ரவி வீட்டில்கூட – விறகு அடுப்பு காரணமாக அடுக்களை மட்டும் கன்னங்கரேல் என்றுதான் இருந்துகொண்டிருக்கும் பாஸாதி கோவில் மடப்பள்ளியைப்போல.
Add Comment