115 கணக்கும் வழக்கும்
ஒரு மதியம் சுந்தர ராமசாமியை ரயிலேற்றிவிட வசந்தகுமார் மோகன் போன்ற நண்பர்களுடன் எக்மோருக்குப் போயிருந்தான். பழம் வாங்கப் பணம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். வண்டி முதல் விசிலைக் கொடுத்தபோதுதான் மீதியைக் கொடுக்காதது நினைவுக்கு வந்தது. ‘ஐயோ மீதியைக் குடுக்க மறந்து வாயையே பாத்துக்கிட்டு நின்னுட்டேன்’ என்று குர்த்தா பாக்கெட்டில் கைவிட்டான். அவரும் சிரித்தபடிக் கையை நீட்டினார். பத்து பைசா ஐந்து பைசா சில்லறைகளைத் தட்டுபோல அகலமாக இருந்த அவர் கைகளில் ஒவ்வொன்றாக வைத்தான். அவரும் அதை சகஜமாக வாங்கிக்கொண்டார்.
சில நாட்கள் கழித்துப் பேச்சுக்கிடையில், ‘ஏம்பா அவ்வளவு பொடி சில்லறையைக் குடுத்திருக்கணுமா’ என்றான் வசந்தகுமார்.
‘ஏன். அது அவரோடதுதான. அதைத் திருப்பிக் குடுக்கறதுல என்ன இருக்கு.’
‘அட ஏம்பா. அதுக்காக ஐஞ்சு பைசா பத்து பைசாவையெல்லாம் எண்ணிக் குடுத்துக்கிட்டு இருக்கவேண்டிய நிலையிலையாப்பா சுந்தர ராமசாமி இருக்காரு’ என்றான்.
‘அவர் இருக்காரா இல்லையாங்கறதில்லையே. அது அவரு காசு. எந்தில்லேங்கறதுதான விஷயம்’ என்றான்.
இந்த சள்ளை பிடித்தவனோடு எதற்குப் பேச்சு. தான் செய்தது சரி என்பதற்காக நாள் பூரா பேசிக்கொண்டே இருப்பான் என்று நினைத்தானோ என்னவோ வசந்தகுமார் அத்துடன் நிறுத்திக்கொண்டன்.
Add Comment