127 தனிமரம்
ரப்பர் செருப்பு கக்கூஸ் போவதற்காக அணிவது என்று குஷாலப்பா சொன்னதிலிருந்து மலிவான விலையில் கிடைக்குமா என்று ஷூ தேட ஆரம்பித்திருந்தான். பர்மா பஜார் பெட்ரோல் பங்கை ஒட்டிய கடையில் கருப்பு நிற ஷூ கொட்டிக்கிடந்தது. பார்க்க புரூஸ்லீ அணிவதைப்போல இருக்கவே, விலை கேட்டான். கடைக்காரன் மலிவாகச் சொல்லவும் சாக்ஸ் இருக்கா என்றான். இதுக்கெல்லாம் சாக்ஸ் தேவையில்ல சார் என்றான் கடைக்காரன். உதைக்கிற போஸில் ஒற்றைக்காலில் நிற்கிற போஸ்டர்களில் ப்ரூஸ்லீ சாக்ஸ் அணிந்திருப்பதைப்போலப் பார்த்த ஞாபகம் இல்லாததால் அப்படியே அணிந்துகொண்டு சைக்கிளில் ஏறினான். ர்ப்பர் செருப்பு எவ்வளவு தேய்ந்தாலும் பெடலுக்கும் காலுக்கும் நடுவே எதோ ஒன்று இருக்கிற உணர்வு இருந்துகொண்டிருக்கும். இந்த புரூஸ்லீ ஷூவின் அடிப்பாகம் மெலிதாக இருந்ததால், எதுவுமே அணியாமல் வெறுங்காலில் மிதிப்பதைப்போல இருக்கவே கட்டாயம் சாக்ஸ் அணியவேண்டும்போலத் தோன்றிற்று. இது வேறயா என்று வழியில் தென்பட்ட பாட்டாவில் நிறுத்தி சாக்ஸ் வாங்கி அணிந்துகொண்டான்.
ஆரம்பத்தில், ‘எங்கடா வாங்கினே,’ ‘எவ்ளோ,’ ‘அட நல்லா இருக்கே’ என்று ஆபீஸ், ட்ரைவ் இன் என்று சொல்லாதவர்களே இல்லை. எல்லாம் ஒரு வாரம்தான். எல்லோரும், ‘என்னடா நாத்தம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதை முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஜெட்டு மோகன்தான்.
ஒரு நாள் புழுக்கமாக இருக்கிறதென்று புரூஸ்லீ ஷூவைக் கழற்றிப் பக்கத்தில் வைத்துவிட்டு சாக்ஸ் காலுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
Add Comment