99 ஆமாவா
பஸ்ஸின் பின்புறப் படிக்கட்டில் இவன் நின்றிருக்க, அதற்குப் பின்னால் இருக்கிற நீண்ட சீட்டில் இரண்டாவதாக அமர்ந்திருந்த நிமா சொன்னாள், ‘என் வேடிக்கையை மறைக்கறீங்க’ என்று.
இவனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியவில்லை.
இவன் கையைப் பின்னால் இழுத்துவிட்டப் பிறகுதான், எதிரில் ஓடிக்கொண்டிருக்கிற தெருவை வேடிக்கை பார்க்கமுடியாமல் தான் மறைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே இவனுக்குப் புரிந்தது. சிரித்துக்கொண்டபடி படிக்கட்டில் ஒரு படி ஏறி நின்றுகொண்டான்.
இவளாவது பரவாயில்லை, கொஞ்ச நாளே ஆகியிருந்தாலும் நிறைய பேசிப் பழகியாயிற்று என்று சொல்லலாம். ஆபீசில் சில நாட்கள் முன், ஐஸி பேப்பரை எழுதிக்கொண்டிருக்கையில் வந்த சூஸன், முக்கியமான பேப்பர் ஒன்று ஹெட்குவார்ட்டர்ஸில் இருந்து வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்றாள்.
எதையுமே தன் இஷ்ட கதியில் மட்டுமே செய்கிறவனான இவன்,
‘எழுதி முடித்துவிட்டுப் பார்க்கிறேன்’ என்றான்.
அவளோ ‘அர்ஜெண்ட். ரிப்போர்ட் கேட்டு போன் வந்துவிட்டது’ என்றாள், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் சீட் பார்க்கிற இன்ஸ்பெக்டரான அவள்.
‘அதற்கு நான் என்ன செய்யமுடியும்’ என்றான் இவன்.
எழுதி முடித்து எதிரில் வைத்திருந்த சில பேப்பர்களை எடுத்துப் பார்த்துவிட்டு, அதில் இல்லை என்று, எழுத இருந்தவற்றை எடுக்கப்போனாள். இவன், அவள் எடுக்கமுடியாதபடி அவற்றின் மேல் தன் கையை வைத்துக்கொண்டான்.
Add Comment