72 அகதி
இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது அவனுக்கு மட்டுமேதெரிந்திருந்தது. அந்தப் பெயர்கூட, அம்மா அடிக்கடி, ‘கண்ணை மூடுவதற்குள் காசி ராமேஸ்வரம் போய்வந்துவிடவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டு இருந்ததால் தெரியவந்திருந்ததுதான்.
பள்ளிக்கூடத்திலேயே சரித்திர பூகோளத்தில் பாஸ்மார்க் மட்டுமே வாங்கிக்கொண்டிருந்த அவன் அறிவுக்கு பெரிய சோதனையாக வந்திருந்தது இலங்கைக் கலவரம். இந்தியாவை இலங்கையோடு இணைப்பது கடல் என்கிற அளவிற்கு மட்டுமே அவனுக்கு இருந்த பூகோள அறிவையும் ராமேஸ்வரத்தில் இருந்துதான் ராமர் இலங்கைக்குப் போனார் என்கிற இதிகாசகால சரித்திர அறிவையும் இணைத்து, ஆங்கிலத்தில் எழுதியும் பியூசி முதல் அட்டம்ட்டிலேயே பாஸாகிய ஒரே பாடமான – தாகூர் கலைக் கல்லூரியில் நாராயணன் சார் மூலம்
ஆல் மென் ஆர் மார்ட்டல்
ராமா ஈஸ் எ மேன்
தேர்ஃபோர் ராமா ஈஸ் மார்ட்டல்
என கற்றுக்கொண்டிருந்த – ‘லாஜிக்’கை பயன்படுத்தி இலங்கையில் இருந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதிகளாக வருபவர்கள் கடல் மார்க்கமாக மட்டுமே வரமுடியும் என்பதால் ராமேஸ்வரத்திற்குத்தான் வந்தாகவேண்டும் என்கிற முடிவுக்கு அவன் வந்திருந்தான். ராமேஸ்வரம் போக முதலில் மதுரைக்குப் போயாகவேண்டும். எனவே எக்மோர் போய் மதுரைக்குப் போகிற ரயிலில் ஏறிக்கொண்டான்.
Add Comment