65 நம்பிக்கை
சற்று ஏமாற்றமாக இருந்தது. அடுத்த நாள் வருவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, வெங்கட் சாமிநாதன் அன்று வரவில்லை என்கிற செய்திதான் ரவீந்திரன் மூலமாக வந்துசேர்ந்தது.
ரவீந்திரன் வேறு, ஃபில்ம் சொசைட்டிகளுக்கு சுற்றில் அனுப்புவதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தாம் இருப்பதாகவும் தொடர்ந்து மூன்று திரையிடல்களுக்குத் போகாமல் இருந்தால் தேர்வுக் குழுவில் இருக்கமுடியாது என்றும் வேலை நெருக்கடி காரணமாய் ஏற்கெனவே இரண்டு வாரங்களாக போகவில்லை என்பதால் அன்று போயே ஆகவேண்டும் சாரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். படங்களைத் தேர்ந்தெடுக்கிற குழுவில் அவர் இருக்கிறார் என்பதே அவனுக்கு பிரமிப்பாக இருந்தது.
ஃபில்ம் சொசைட்டியில் படம் பார்ப்பதையே பெரிய கெளரவமாக எண்ணி, கமர்ஷியல் குப்பைகளைப் பார்க்கிற கோடி ஜனங்களைத் துச்சமாக நினைத்துத் தெனாவட்டாகத் திரிந்துகொண்டிருக்கும் அவனுக்கு, நாடு முழுக்க தன்னைப் போன்று, உலக சினிமாக்களைப் பார்ப்பதற்காகவே சந்தா கட்டி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்காகவென்றே நடத்தப்படுகிற சொசைட்டிகளில் காண்பிக்கிற படங்களை, திரையிடலுக்குத் தேர்வு செய்கிற இடத்தில் ஒருவர் இருக்கிறார் என்பதும் அவர் தனக்குத் தெரிந்தவராக வேறு இருக்கிறார் என்பதும் எல்லாவற்றையும்விட தேர்வுக்குழுவில் சகலவிதமான ரசனை கொண்ட ஆட்களும் இருப்பார்கள், தரமான படங்களைத் தேர்ந்தெடுப்போர் குரலுக்கு வலு சேர்ப்பதில் தம் பங்கும் இருக்கவேண்டும் என்று, எந்த உபயோகமும் இல்லையென்றாலும் பொறுப்போடு ஒரு மனிதர் ஓடுகிறாரே என, தயங்காமல் தங்க இடம் கொடுத்தவர் என்று ரவீந்திரன் மீதிருந்த நல்லெண்ணம் மரியாதையாக மாறியது.
வேறு வழியில்லை, கால்போன போக்கில் நடந்துதான் அன்றைய சாயங்காலத்தைக் கழித்தாகவேண்டும். இரவு உணவை வெளியில் பார்த்துக்கொள்வதாய் சமையல்கார அம்மாளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
Add Comment