143. இரண்டாவது முறை பிரதமர்
பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் தான் பிரதமர் ஆவது. இரண்டாவது, முக்கியமான காங்கிரஸ் தலைகள் பல தேர்தலில் உருண்டது.
அவற்றில் தலையாயது, இந்திரா காந்தியின் முன்னாள் ஆதரவாளரும், தற்போதைய அதிருப்தியாளருமான காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜின் தோல்வி.
அவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவரது சொந்த தொகுதியான விருதுநகரில் போட்டியிட்டார்.
அவருக்கு எதிராக பெ. சீனிவாசன் என்ற மாணவர் தலைவரை தி.மு.க. தன் வேட்பாளராக நிறுத்தியது. அவர் தி.மு.க.வின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற முக்கியமான மாணவர் தலைவர்களுள் ஒருவர்.
விருதுநகர் தொகுதியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் திரண்டு வந்து சீனிவாசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.
ஒரு கார் விபத்தில் சிக்கி, ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள்ளான காமராஜ் “நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்” என்று சொல்ல, தி.மு.க. தரப்பிலிருந்து அதன் தலைவர் அறிஞர் அண்ணா, “ நீங்கள் படுப்பீர்கள் ஆனால் ஜெயிக்க மாட்டீர்கள்” என்று பதிலடி கொடுத்தார்.
Add Comment