184. நகர் வாலா
பங்களாதேஷ் பிரச்சினையின் ஆரம்பக் கட்டத்தில் இந்திரா காந்தி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அதற்குக் காரணமானவர் நகர்வாலா.
1971 மே மாதம் 24ஆம் தேதி, திங்கள்கிழமை. புதுடெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள பாரத ஸ்டேட் பாங்க் கிளை. அங்கே தலைமை கேஷியராக இருந்தவர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ரா. எஸ்.பி.ஐயில் கால் நூற்றாண்டுக்கு மேல் சர்வீஸ் போட்டவர்.
காலை மணி சுமார் பதினொன்றே முக்கால். அவர் தன் வேலையில் மும்முரமாக இருந்த நேரத்தில் 45468 என்ற எண் கொண்ட அவரது நேரடி தொலைபேசி அலறியது.
எடுத்துப் பேசிய மல்ஹோத்ராவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. காரணம், மறு முனையில் பேசியவர் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளர் பி.என்.ஹக்ஸர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்.
‘நான் இப்போது உங்களிடம் ஒரு ரகசியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன். உங்கள் அறையில் வேறு யாராவது இருந்தால் வெளியில் போகச் சொல்லிவிடுங்கள்’ என்ற பீடிகையோடு பேசத் தொடங்கினார்.
‘பங்களாதேஷ் தொடர்பான ஒரு ரகசியத் திட்டத்துக்காகப் பிரதமருக்கு உடனடியாக அறுபது லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எல்லாமே நூறு ரூபாய்களாக இருக்க வேண்டும்.’















Add Comment