85. மௌண்ட் பேட்டன் ராஜதந்திரம்
தேசப் பிரிவினை பற்றி மற்றத் தலைவர்கள் எல்லாம் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். காந்திஜி சொன்னதைப் பார்க்கலாம். 1940-ல் பாகிஸ்தான் தீர்மானத்தை முஸ்லிம் லீக் நிறைவேற்றியதை அடுத்து, ஹரிஜன் பத்திரிகையில் காந்திஜி என்ன எழுதினார் தெரியுமா..?
“இந்த ‘இருதேச சித்தாந்தம்’ அசத்தியமானது. ஒன்றாக இருக்க வேண்டும் என்று கடவுள் நிச்சயித்திருக்கிற தேசத்தை மனிதனால் ஒருபோதும் துண்டாட முடியாது. தேசப் பிரிவினை என்பது அப்பட்டமான அசத்தியம். அந்தக் கருத்தே என் அந்தராத்மாவுக்கு நேர் விரோதம். அப்படியொரு சித்தாந்தத்திற்கு இசைவு தெரிவிப்பது என்னைப் பொறுத்தவரை கடவுள் மறுப்பேயாகும். அகிம்சையான எல்லா வழிகளிலும் இறங்கி நான் அதைத் தடுப்பேன்.
கணக்கற்ற இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ, ஒரே தேசமாக விளங்க பல நூற்றாண்டுக் காலமாக செய்த முயற்சியை எல்லாம் அது பாழாக்கிவிடும். பாரதத்தைப் பிரிப்பது அராஜகத்தைவிட மோசமான காரியம். சகித்துக் கொள்ளவே முடியாத படுகொலை. பாரதத்தை வெட்டிப் பிரிப்பதற்குமுன் என்னை வெட்டித் துண்டாக்குங்கள்! 200 ஆண்டுகளாக முகலாயர்கள்கூடச் செய்யத் துணியாத காரியத்தைச் செய்யக் கூடாது.” என்று எழுதினார் காந்திஜி.
Add Comment