57. ஆனந்தக் கண்ணீர்
வைஸ்ராய் இர்வின் பிரபு – காந்திஜி இடையிலான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலன் ஏதும் அளிக்காத நிலையில், அதனால் தமக்கு அவப்பெயரே மிஞ்சும் என வைஸ்ராய் நினைத்தார். எனவே, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதன் பேரில், மரியாதை நிமித்தம் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்றும், அதற்கு பெரிதாய் அரசியல் முக்கியத்துவம் இல்லை என்பது போலவும் இந்தியாவில் வைஸ்ராய் தரப்பு கூறியது.
அது மட்டுமில்லாமல், அந்தக் கூட்டம் குறித்த அதிகாரப் பூர்வமான அரசாங்கக் குறிப்புகளில்கூட காந்திஜி குறித்த பாசிடிவான கருத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை.
அந்த அரசாங்கக் குறிப்புகளில், இடம்பெற்றிருந்தவற்றின் சாராம்சம்:
காந்திஜி வைஸ்ராய் பயணித்த ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், வைஸ்ராய் அதிலிருந்து தப்பிப் பிழைத்ததற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அடுத்து, காந்திஜி வட்டமேஜை மாநாட்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தரப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட வேண்டும். அப்படி ஓர் உறுதிமொழி வழங்க முடியாதென்றால், பேச்சு வார்த்தையால் எந்தவிதமான பலனுமில்லை” என்று கூறிவிட்டார்.
வைஸ்ராய், டொமினியன் அந்தஸ்து பற்றியும், அடுத்து கனடாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்ட முறையையும் விளக்கிக் கூறினார். அங்கே படிப்படியாகத்தான் டொமினியன் அந்தஸ்த்து வழங்கப்பட்டது. ஒரே இரவில் அளிக்கப்படவில்லை என்ற விளக்கத்தையும் காந்திஜி ஏற்றுக் கொள்ளவில்லை.
காந்திஜியுடன் இருந்த மோதிலால் நேரு, “அடைந்தால் டொமினியன் அந்தஸ்து! அதற்குக் கீழாக எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்!” என்று குறிப்பிட்டார். அரசுக் குறிப்பில் இதைப் பதிவு செய்தவர்கள், கூடவே, “இதே வாசகத்தைக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மோதிலால் நேருவின் மகனுமான ஜவஹர்லால் நேரு, லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும்போது பயன்படுத்தினார்” என்றும் உபரியாகப் பதிவு செய்திருந்தார்கள்.
Add Comment