98. பொய்ப் பிரசாரம்
காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க ராஜா ஹரி சிங் சம்மதித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்; உடனே, இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் குவிக்கப்படுகிறது என்பதை அறிந்த முகமது அலி ஜின்னா விரக்தியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜெனரல் கிரேஸியைக் கூப்பிட்டு, “இனி கூலிப் படைகளை நம்பிப் பயன் இல்லை! பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரைத் தாக்கட்டும்!” என்று உத்தரவிட்டார்.
ஜெனரல் கிரேஸி எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், “பாக். ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர் ஃபீல்ட் மார்ஷல் ஆச்சின்லெக்கின் அனுமதி இல்லாமல் நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது திருவாளர் கவர்னர் ஜெனரல் அவர்களே!” என்று மிக்க மரியாதையோடு தன் மறுப்பினைத் தெரிவித்தார்.
மறுநாள் காலை ஃபீல்ட் மார்ஷல் ஆச்சின்லெக், ஜின்னா முன் ஆஜரானார். “அவர் பொறுமையுடன், “ஐயா! தற்போது, சட்டபூர்வமாக, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீருக்குள் காலடி எடுத்து வைத்தால், உடனடியாக பாகிஸ்தானிய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பிரிட்டிஷ்காரர்களையும் பிரிட்டன் அரசு விடுவித்துக் கொள்ளும்! அது இப்போதைக்கு உசிதமல்ல!” என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொன்னார். நிலைமையைப் புரிந்துகொண்டு ஜின்னா, “பாக். ராணுவம் காஷ்மீருக்குப் போக வேண்டாம்!” என்று சொல்லிவிட்டார். ஆனாலும், விஷயத்தை அப்படியே விட்டுவிட ஜின்னா தயாராக இல்லை.
Add Comment