53. ஆங்கிலேயரின் அலட்சியம்
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின் தலையீடு அவசியமானது.
டிசம்பர் 27ஆம் தேதி, காந்திஜி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் “டொமினியன் அந்தஸ்து திட்டம் உட்பட நேரு கமிட்டி அறிக்கையை காங்கிரஸ் கட்சி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுக் காலத்தில் ஆங்கிலேய அரசாங்கம், இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டும். அது நடக்காத பட்சத்தில், காங்கிரஸ் முழுமையான சுதந்திரம் என்ற லட்சியத்துக்கான போராட்டத்தை துவக்க வேண்டும். அவசியமானால், ஒத்துழையாமை இயக்கம் என்ற ஆயுதத்தை மீண்டும் கையில் எடுப்பதற்குத் தயங்கக் கூடாது” என்பதே காந்திஜியின் சமரச ஃபார்முலா.
Add Comment