ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் வரிசைகட்டும் என்கிற நாசாவின் அறிவிப்பு கூட அவ்வப்போது வரும். ஆனால் எங்கள் வீட்டில் மூவரின் விடுமுறை நாள்களும் ஒன்றாக அமைவது அரிதினும் அரிது. அப்படி அரிதாகக் கிடைத்த விடுமுறையை இந்த வருடம் பாரீஸில் கொண்டாடினோம். திகட்டத் திகட்ட பிரெஞ்சுப் புரட்சியையும் நெப்போலியனையும் அறிந்து கொண்டோம். மூளையை மூச்சுத் திணறவைத்த அந்தக் கதை ஒரு பக்கம் இருகட்டும். நான் இங்கே பகிர்ந்து கொள்ளப்போவது என்னை மீட்டுக் கொடுத்த தாவர உணவுச் சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் பற்றி.
எங்கு வெளியில் போவதென்றாலும் தாவர உணவை மட்டும் உண்ணும் எனக்கும் என் மகனுக்கும் இது ஒரு பெரிய சவாலாகிவிடும். முன்கூட்டியே உணவகங்களைத் தேடிப் பார்த்துப் பதிவு செய்த பின்னர் விடுமுறைக்குப் புறப்படுவதே எங்கள் வழக்கம்.
பசி மயக்கம் இல்லாவிட்டால் தான் கலையும் சரித்திரமும் என்பதில் நான் விடுமுறைக் காலங்களில் மட்டும் வள்ளுவனுக்கு நேரெதிர். அந்தந்த நாட்டின் உணவுகளுக்கு நிச்சயம் முன்னுரிமை கொடுப்போம். மிஷலின் (Michelin) தர உணவகம் ஒன்று இருந்தால் அங்கு சென்று உணவு உண்டு அதன் தரத்தை மற்ற நாட்டு மிஷலின் உணவகங்களோடு ஒப்பு நோக்கிக் களிப்போம். குறிப்பாக நியூயார்க்கில் உள்ள மிஷலின் உணவகத்தோடு ஒப்பிடுவது ஒரு சுகம்.
Add Comment