05 – எலி கற்றுத் தந்த பாடம்
வலோத்யாவின் தந்தை விளாதிமிர் பணிபுரிந்த தொழிற்சாலை, ஊருக்குச் சற்றே வெளியிலிருந்த குடியிருப்பில் இவர்கள் வசிக்க அறை கொடுத்தது. ஐந்தாம் மாடியில் வீடு. லிப்ட் இல்லை. போருக்கு முன்னர் அவர்களுக்கெனச் சொந்த வீடிருந்தது. இப்போது இது மட்டும்தான்.
குறைந்த செலவில் இந்திய ஆண்கள் தங்கும் மேன்ஷன் போன்றது அந்தக்கால சோவியத் குடியிருப்புகள். குடும்பமாகத் தங்குவதற்கு மட்டும் தனி அறைகள் இருக்கும். மற்றபடி சமையலறை, குளியலறை, கழிப்பறை அனைத்தும் பொதுவாகப் பயன்படுத்தக்கூடியது. நாற்றமடிக்கும் கழிப்பறை, அக்கம்பக்கத்து வீட்டாருடன் சண்டைகள், ஆடம்பரமில்லாமல் வாழுமளவு போதிய வருமானம் என்ற சராசரி வாழ்க்கை. இருந்தபோதும் தங்களுக்குக் கிடைத்தவற்றில் சிறந்ததை வலோத்யாவுக்குக் கொடுத்து வளர்த்தார்கள் அவரது பெற்றோர்.
எட்டு வயதில்தான் வலோத்யாவைப் பள்ளியில் சேர்த்தார்கள். பரவிவந்த கொள்ளை நோய்களுக்குப் பயந்து, அதுவரை மரியா அவனுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுத்தார். கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த வலோத்யாவுக்கு பள்ளிக்குச் செல்லப் பெரிதாக விருப்பமில்லை. வீட்டுக்கு வெளியே இருக்கும் பெரிய முற்றத்தில் நாள் முழுக்க விளையாடுவது மட்டுமே போதுமானதாக இருந்தது. அதுதான் அவனுடைய கற்பனை மாளிகை. அவனுடைய நண்பர்களுடன் அங்குதான் ஆட்சி செய்து வந்தான். பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த பிள்ளையாக, வேறெங்கும் விளையாடச் செல்லாதவரை அங்கு விளையாட அனுமதிக்கப்பட்டான்.















Add Comment