பதவிக்குரிய பரிசுகள்
21-ஜனவரி-2007,
சோச்சி,
ரஷ்யா.
ஜெர்மனியின் அதிபர் ஆங்கலா மெர்க்கல் அதிபர் புதினைச் சந்திக்க வந்திருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ரஷ்யக் கச்சா எண்ணெய், எரிவாயு வர்த்தகம் தங்குதடையின்றித் தொடர்வதை உறுதி செய்வதற்கான சந்திப்பு அது. பெலாரஸ், உக்ரைன் நாடுகள் வழியாக இவை ஐரோப்பாவுக்கு விநியோகிக்கப்பட்டன. அண்டை நாடுகளுடன் இருந்த பிணக்குகளால் வர்த்தகம் பாதிப்படையக் கூடாது என்று ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க வந்திருந்தார்.
குளிரைக் கட்டுப்படுத்த அறையின் ஓரத்தில் புகைப்போக்கியுடன் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. அதற்கு முன்னே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் புதினும் ஆங்கலாவும் அமர்ந்தார்கள். பேச்சுவார்த்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே பளபளவென ஒரு லாப்ரடோர் நாய் அறைக்குள் நுழைந்தது. கருப்பு நிறத்தில் அவர்களது கால் உயரத்துக்கு வளர்ந்திருந்தது அதிபரின் செல்லப் பிராணி.
தனது வளர்ப்பு நாயான கானியைப் பார்த்ததும் குஷியாகிவிட்டார் புதின். வாலாட்டியபடியே அவரிடம் வந்த கானியின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே பேச்சைத் தொடர்ந்தார் புதின். அந்நேரம் ஆங்கலா தனது கைகளை இணைத்து ஒன்றுக்கொன்று ஆறுதலாக இருக்கும்படி இறுக்கமாக அமர்ந்திருந்தார். கால்களையும் ஒன்றாகச் சேர்த்து அசையாமல் இருந்த ஆங்கலாவை நெருங்கியது கானி. நிதானமாக முகர்ந்து பார்த்துவிட்டு அவரிடமிருந்து நகர்ந்தது. ஆனால் அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தது. விருந்தினர் முன்பு தனது குழந்தை சாகசம் செய்வதைப் பெருமிதத்துடன் ரசித்தபடியே பேசிக் கொண்டிருந்தார் புதின்.














Add Comment