கட்டளைகளே சட்டங்கள்
01-ஆகஸ்ட்-1975.
கேஜிபி அலுவலகம்,
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம்,
ரஷ்யா.
நீல நிறச் சீருடையில் ஜூனியர் லெஃப்டினன்டாக கேஜிபி அலுவலகத்துக்குள் நுழைந்தார் வலோத்யா. தோள்பட்டை வாரில் நான்கு நட்சத்திரங்கள். கழுத்தின் கீழ்வரை நீண்டிருந்த காலரில் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. சோவியத்தின் ராணுவ அதிகாரத்தை உணர்த்தும் சின்னம் இது. கேஜிபியைக் குறிக்க ஜிபி என்ற எழுத்துருக்கள் பதிக்கப்பட்டிருந்தன. கர்னல் டானியல் நாசிரொவ் தலைமையில் நடந்த வரவேற்பு விழாவில் புதிய அதிகாரிகள் வரவேற்கப்பட்டார்கள்.
தற்செயலாகவோ பொருத்தமாகவோ அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஹெல்சின்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. சோவியத், ஐரோப்பிய, அமெரிக்க, கனடா நாடுகள் பாதுகாப்பு, பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான கட்டமைப்பு உருவானது.
கேஜிபியின் தலைவர் யூரி ஆன்ட்ராபோவ் இதை மேற்குலகின் திட்டமிட்ட சதி என்றார். மனித உரிமைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் முதலாளித்துவப் பிரசாரங்களை நுழைப்பார்கள், இது சோவியத்தின் உள்நாட்டு அமைதியைச் சீர்குலைக்கும் என்றார். கேஜிபியின் புதிய உறுப்பினர்களுக்கும் இதுவே போதிக்கப்பட்டது.















Add Comment