உழைப்பும் ஓர் ஒழுக்கமே
நோவா அகர்யோவா,
மாஸ்கோ,
ரஷ்யா.
காஷாவுடன் தொடங்குகிறது அதிபர் புதினின் காலை. புரதம் நிறைந்த சிறு தானியங்களாலான கஞ்சிதான் இந்த காஷா. ரஷ்யர்களின் பிரதான உணவு. ஒருசில நாள்களில் அவருக்குப் பிடித்தமான காடை முட்டைகளாலான ஆம்லெட்டும், மென்மையான பாலாடைக்கட்டியும் பழச்சாறும் சாப்பிடுவார். நம்மைப் போலவே காலை உணவை மணக்கும் காபியுடன் முடித்துக்கொள்ளும் பழக்கமுடையவர். சமைப்பதற்கான பொருள்கள் ரஷ்யாவின் தலைமை மதகுருவான கீரியிலின் தோட்டத்திலிருந்து நாள்தோறும் வந்து சேர்கின்றன.
அளவான, ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடும் புதினின் ஒரே பலவீனம், பிஸ்தா ஐஸ்கிரீம். தன்னைச் சந்திக்க வரும் அதிபர்களுக்கும் இதை அளித்து அந்தச் சாக்கில் அவரும் உண்பார். நீண்டநேரம் இரவுகளில் விழித்திருக்க அவருக்கு உதவுவது க்ரீன் டீ. வேலைப்பளு அதிகமிருக்கும் நாள்களில் இரவு உண்பதைத் தவிர்த்துவிடுவார். அரசியல் பொதுநிகழ்வுகளில் மரியாதையின் நிமித்தம் ஒயின் அல்லது பீர் குடிப்பார். மற்றபடி மது அருந்துவதில் அவருக்குப் பெரிய விருப்பம் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்துக்குச் செல்வதும், பாவ மன்னிப்பு கேட்பதும் வழக்கம்.
அதிபரானது முதல் நோவா அகர்யோவா என்ற பண்ணைத் தோட்டத்தையே தனது வீடாக மாற்றிக்கொண்டார் புதின். சோவியத் ஆட்சியில் வெளிநாட்டு விருந்தினர்கள் தங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட டாச்சா அது. வில்லா போன்ற பெரிய வீடு. விளையாட்டு வளாகம், மருத்துவமனை, ஹெலிகாப்டர் தளம், பனிச்சறுக்காட்டக் களம் என ஒரு சிறிய நகரத்தின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது. அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகளின் தலைவர்களை இந்த டாச்சாவுக்கு அழைத்துச் சுற்றிக் காண்பிப்பது புதினின் வழக்கம். பொதுமக்கள் நுழைய அனுமதியில்லை.















Add Comment