நீலநிற தார்பாலின் போர்த்தப்பட்ட தள்ளுவண்டிக் கடைகள், கரையுடன் இழுத்துக் கட்டப்பட்ட மரப்படகுகள், அவற்றை வேகமாக மோதி செல்லும் அலைகள், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விடாது பகிரப்படும் பாதுகாப்பு வழிமுறைகள், மழைநீரை உறிஞ்சியெடுக்கும் மோட்டார் பம்புகள், நகரின் மத்தியில் டெம்போக்களில் எடுத்துச் சொல்லப்படும் ஃபைபர் படகுகள். சென்னையில் மழைக்காலம் வந்துவிட்டதை உறுதிப்படுத்தும் காட்சிகள் இவை.
‘வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாறியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை…’ என்று பயமுறுத்தும் பின்னணி இசையுடன் செய்தி சேனல்கள் பரபரப்பானாலே அடுத்த இரண்டு மாதங்களுக்குப் புயல் சின்னங்கள், கனமழை எச்சரிக்கைகள் தொடரும் என்று அர்த்தம். இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகள் தென்மேற்குப் பருவமழையால் அதிகம் பயன்பெறும். ஆனால் தமிழ்நாடு அதிலும் சென்னைக்குக் கிட்டத்தட்ட அறுபது சதவிகித மழையைக் கொண்டுவருவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த வடகிழக்குப் பருவ மழைதான்.
நீரில் உருவாகும் புயல்கள் நிலத்தைத் தாக்கும்போது அது கனமழையைக் கொண்டுவரும். அக்டோபர் மாதத்தில் இந்திய நிலப்பகுதிகள் கடலை (வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல்) விட அதிகமாகக் குளிர்ந்துவிடும், அப்படிக் குளிரும்போது அது நிலப்பகுதியில் உயர் அழுத்தத்தையும், கடல் பகுதிகளில் குறைந்த அழுத்தத்தையும் உருவாக்கும். இதனால் காற்றின் திசை மாறும்.















Add Comment