30 எலியும் பூனையும்
ஊர்வலம் பெங்களூரை நெருங்கப்போகிறது எனும்போது – நாங்களும் சைக்கிள் ஓட்டுகிறோம் என்கிற பூனே பெண்களின் கோரிக்கை மறுபடி தலைதூக்க ஆரம்பித்தது. பெங்களூர் தன்னுடைய ஊர் என்கிற நிறைவில் சுஜாதா அமைதியாக இருந்திருக்கவேண்டும். அல்லது, முதல் முதலாக அவள் முன்வைத்த, அந்த மூவரைப்போலத் தானும் சைக்கிள் ஓட்டவேண்டும் என்கிற விருப்பத்திற்கு அத்துலிடமிருந்து பெங்களூரில் பார்த்துக்கொள்ளலாம் என்கிற சாதகமான சமிக்ஞைகூடக் கிடைத்திருக்குமோ என்னவோ. பூனே பெண்களுக்கும் அத்துலுக்கும் இடையில் தனக்கு சம்பந்தமில்லாததைப்போல ஒன்றும் பேசிக்கொள்ளாமல் நடக்கிற பிரச்சனையை அமைதியாக வேடிக்கை பார்ப்பவளாக இருந்துகொண்டிருந்துவிட்டு இவனும் சுதீரும் இருக்கையில் வந்து, பொங்கிப்பொங்கிச் சொல்ல ஆரம்பித்தாள்.
ஆரம்பத்திலிருந்தே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிற மூன்று பெண்களும் இந்த சைக்கிள் ரேலிக்காக என்று வந்தவர்களேயில்லை என்கிற குண்டைப் போட்டாள். இவனுக்கு நம்பவே முடியாததாக இருந்தது. இதில் சேர்வதற்காக நாம் பட்ட பாடு என்ன. இவர்கள் என்ன வண்டி மாற்றுவதைப்போல இவ்வளவு சுலபமாய் வந்திருக்கிறார்கள் என்று மனசு ஆறவில்லை.















Add Comment