‘G இன்றி அமையாது உலகு’, புத்தகக் கண்காட்சியில் ஸீரோ டிகிரியில் அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்றாக அமைந்த நற்செய்தியுடன் 2025ஆம் வருடம் பிறந்தது. இப்போது வருட இறுதியில் மயல் விற்பனையிலும் விமர்சனத்திலும் பெயர் கொண்டு சேர்த்திருக்கிறது. இந்த இரண்டு இனிப்பான செய்திகளினூடே செயல் சேர்த்து, எழுத்து நிறைந்து, மகிழ்வு பெருகிய வருடமாக இவ்வருடம் அமைந்திருந்தது.
இந்த வருடத்தின் முதல் எழுத்துப்பணியாக மயல் நாவலைத்தான் எடுத்துக்கொண்டேன். வருடத்தின் முதல் இரண்டு மாதங்களும் வேறொரு பெரிய நாவலை எழுதுவதற்கான ஆய்விலும் எழுத்துப்பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். சில காரணங்களினால் அது ஒத்திப் போனது. அதை ஈடுசெய்வதற்காக இன்னொரு நாவலை ஒரு மாதம் முழுவதும் தினம் ஓர் அத்தியாயமாகத் தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்தோம். ஆசிரியர் ஒரு காதல் கதை எழுதப்போவதாகச் சொன்னார்.
என்னிடமிருந்த இன்னொரு ஒற்றைவரிக் கதை , உலகின் அதிமதுரமான இனிப்பைத் தேடி பயணம் செய்யும் ஓர் இளைஞனின் கதை. அதனை கும்பகோணம் பின்னணியில் விவரித்து, உணவு மற்றும் காமம் துரத்தும் கிருஷ்ணாவின் பாத்திரத்தை உருவாக்கி ஒரு பதினைந்து நிமிட வாய்ஸ் நோட்டில் மயல் நாவலில் களத்தை, பாத்திரங்களை, நடையை உருவாக்கி அனுப்பியிருந்தேன். ஆசிரியர் ‘இதுதான், எழுதுங்க’ என்றார். மயல் நாவல் தொடங்கியது.














Add Comment