22 – ஸார், கம்யூனிசம், அதிபர் ஆட்சி
01-01-2000
குஜர்மெஸ், கிழக்கு குரோஸ்னி,
செச்சனியா.
“உங்கள் வீரத்தை ரஷ்யா மிகவும் பாராட்டுகிறது. நம் நாட்டின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் மீட்டெடுக்கும் முயற்சி மட்டுமல்ல இது. ரஷ்யப் பேரரசைப் பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கியமான நிகழ்வு இது.” ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்ற முதல் நாள், புதின் செச்சனியாவில் ஆற்றிய உரை இது. செச்சனியாப் போராளிகளை ஒடுக்கும் களத்திற்கே நேரில் சென்று, ரஷ்ய வீரர்களுக்கு வேட்டைக் கத்திகளைப் பரிசளித்தார். இவைக் குத்துவதற்கு அல்ல, வெட்டுவதற்குப் பயன்படுபவை. அடுத்த மூன்று மாதங்களில் செச்சனியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
செப்-1999 முதலே மாஸ்கோவில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களை அரங்கேற்றினர் செச்சனியாப் போராளிகள். அல்லது அவர்கள்தான் செய்ததாகச் சொல்லப்பட்டார்கள். முந்தைய அதிபர் எல்ஸினுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை மீறி, மீண்டும் ஊடுருவினர். இம்முறையும் அவமானப்பட, ரஷ்யா தயாராக இல்லை. நன்கு தயாரிக்கப்பட்ட ராணுவத்தை, பிரதமராக இருந்த புதின் செச்சனியாவிற்கு அனுப்பினார். போராளிகளைத் துரத்தினார். கூடவே, ரஷ்யாவை எதிர்க்கும் செச்சனியாப் படைத்தலைவரை நீக்கிவிட்டு, ஆதரவான தலைவரை நியமித்தார். இனிப் போரெதற்கு? அண்டை நாடுகளுக்கும் இதே உத்திதான். ஒரு நாட்டின் / கூட்டத்தின் தலைவரைக் கைக்குள் வைத்துக்கொண்டால் போதும். தேவையில்லாமல் அதன் ராணுவத்தோடும், மக்களோடும் போர் புரியும் அவசியம் ஏற்படாது.
Add Comment