02. அடிமைகள்
தேதி: 09-ஜனவரி-1905
நாள்: இரத்தக்கறை படிந்த ஞாயிறு
இடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா
உழைத்துத் தேய்ந்த தொழிலாளிகள் ஒன்று கூடினார்கள். அவர்களின் கோரிக்கைகளின் பட்டியல் கையிலிருந்தது. பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நாளின் வேலை நேரம் எட்டு மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும். முடிந்தால், அரசியலமைப்பும், வாக்குரிமையும். அமைதியாக ஊர்வலம் சென்று, தங்களின் மன்னர் நிக்கோலஸிடம் கொடுப்பதே திட்டம். கண்டிப்பாக அவர் மனமிரங்கி தங்களுக்குச் செவிசாய்ப்பார் என்று நம்பினார்கள்.
மதகுரு தந்தை ஜார்ஜ் கபோன் ஊர்வலத்தை வழிநடத்தினார். பெண்களும், குழந்தைகளும் முன் வரிசையில் சென்றார்கள். கைகளில் சிலுவைகள், நிக்கோலஸின் புகைப்படங்கள். தேவாலயத்தில் பாடும் இறைப்பாடல்களை பாடிக்கொண்டே ஊர்வலமாகச் சென்றார்கள்.
நிக்கோலஸ் II மன்னர் அரண்மனையில் இல்லை. அமைச்சர்கள் ஊர்வலத்தைத் தடைசெய்யப் படைகளை நிறுத்தி வைத்திருந்தனர். மக்கள் முன்னேறத் தொடங்கினார்கள். கண்மூடித்தனமாக சுடப்பட்டார்கள். இருநூறு பேர் இறந்தார்கள். எண்ணூறு பேர் இறப்பதற்குக் காத்திருந்தார்கள்.
Add Comment