“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக் குறைத்து, உக்ரைனின் ஆயுதத் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். ஒரு வருடமாகக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுக்குப் பிறகு, பரபரப்பாகி விட்டது உக்ரைனின் போர்க்களம். நாளொரு பிரச்சினையும் பொழுதொரு புதிய ஆயுதமுமாக அதிகரித்து வருகிறது பதற்றம்.
வட கொரியாவிலிருந்து குண்டுகளை மட்டும் அனுப்பி வைக்காமல், பல குண்டர்களையும் அனுப்பி வைத்தார், கொழுகொழு குழந்தை போன்ற அதிபர் கிம். போதிய பயிற்சி எதுவுமின்றி போர்க்களத்தில் உக்ரைன் வீரர்களிடம் இவர்களில் சிலர் மாட்டிக் கொண்டார்கள். இது சர்வதேச அரங்கில் பெரிதும் கண்டனத்துக்குள்ளானது. பிற நாட்டு வீரர்களை ரஷ்யா போருக்குப் பயன்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினார்கள். போர் தொடங்கிய முதல் மாதத்திலிருந்தே உக்ரைனுக்காக, பல நாடுகளின் கூலிப்படையினர் களத்தில் உள்ளனர். என்ன… இவர்கள் தனியார் படை என்பதும், வட கொரிய வீரர்கள் அரசாங்க ராணுவம் என்பது மட்டுமே வித்தியாசம். இதற்கெல்லாம் ரஷ்யாவோ, வட கொரியாவோ யாருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. சத்தமில்லாமல் இரு நாட்டு ஒப்பந்தங்களை திருத்தி, அதன்படியே இந்த வீரர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றனர் என்றனர்.
இந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உக்ரைன் போர்க்களத்திலிருந்து பிரிட்டன் நாட்டு வீரரைக் கைது செய்தது ரஷ்யப்படை. இருபத்திரண்டு வயதாகும் ஜேம்ஸ் ஸ்காட், முன்னாள் பிரிட்டன் ராணுவத்திலிருந்தவர். உக்ரைனுக்காகப் போரிட வந்திருப்பவர். இதே போல ரஷ்யாவிற்காகப் போரிடவும் ஏற்கனவே நேபாள், இந்தியா என்று பலநாட்டு வீரர்களும் களத்திலுள்ளனர். ரஷ்யத் தரப்பிலும் சரி, உக்ரைன் தரப்பிலும் சரி, மாதச் சம்பளமாக உள்நாட்டைவிட ஐந்து மடங்குக் கூடுதலாகக் கிடைப்பதே, இவர்கள் போருக்குச் செல்லக் காரணம். உண்மை தெரிந்தாலும், சர்வதேச அளவில் குற்றஞ்சாட்ட இதுவும் ஒரு சாக்கு, அவ்வளவே.
Add Comment