உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில நாடுகளுக்கே முன்னுரிமை. இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னதான் வளர்ந்தாலும், தொண்டை கிழியக் கத்தினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு செங்கல்லுக்கும் கேட்காது. சென்ற வார ஐக்கிய நாடுகள் பொதுச் சபை(United Nation General Assembly UNGA) கூட்டம் கூடி இதைப் பற்றி நெடு நேரம் பேசியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (United Nations Security Council, UNSC) ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்று. உலகநாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பினைப் பராமரிப்பது, அமைதி காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, தேவைப்படல் எந்த ஒரு நாட்டின் மீதும் இராணுவ நடவடிக்கைகள் எடுப்பது போன்ற அதிகாரங்கள் இந்த கவுன்சிலிற்கு உண்டு. இதில் பதினைந்து உறுப்பினர்கள் உள்ளனர். சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ். P5 எனப்படும் இந்த ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இதர பத்து உறுப்பினர்கள் நிரந்தரமற்றவர்கள். சுழலும் நாற்காலி விளையாட்டு போல் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு நிரந்தரமற்ற உறுப்பினருக்கும் இரண்டு ஆண்டு காலம் உறுப்பினராக இருக்கலாம்.
நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் தான் வீடோ அதிகாரம் உண்டு. அதாவது அவர்கள் மட்டும் தான் எந்த ஒரு நடவடிக்கையும், முடிவும் எடுக்க இயலும். எடுத்த முடிவைத் தடுக்கலாம். இந்த ஐந்தில் ஒருவருக்கு மட்டும் ஒரு முடிவில் இஷ்டமில்லை என்றால், அந்த முடிவு எப்பேர்ப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், ரத்து செய்யப்படும். சரி, இதர உள்ள பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்களின் உரிமை தான் என்ன? “செயலற்றது” என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். இந்தப் பத்து நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகள், அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளலாம், வாதாடலாம், வாக்களிக்கலாம். ஆனால் ஒரு முடிவும் எடுக்க முடியாது.
Add Comment