118. ஐவர்
ஊகமென்பதா, உள்ளுணர்வென்பதா? எனக்குத் தெரியவில்லை. உளமொரு பூரண பொற்குடமென்றால் என் குடம் இருக்கும் இடத்தையும் நானறியேன். அறிந்ததெல்லாம் ஒன்றுதான். என் பொருளுக்கும் என் சிந்தைக்கும் தொடர்பில்லை. அது எங்கோ கிடக்கிறது. நான் எதிலோ கிடக்கின்றேன். நான் சிந்திக்கிறேன். கருதி அமரும் சிந்தைகளைப் படித்தறிகிறேன். இக்கட்டமைப்பின் வினோதம் அல்லது விசித்திரம் எனக்கு விளங்கவில்லை. விளங்காதிருக்கும்வரை இருப்பேனென்று தோன்றுகிறது.
ஆனால் இதுவரை நான் செய்ததெல்லாம் மிக நேரடியான வினைகள். எந்தச் சிந்தையைப் படிக்க விரும்புகிறேனோ, அதனைக் கருதி, அதனுள் நிறைந்துவிடுகிறேன். அங்குள்ளதை எடுத்துச் சொல்கிறேன். இடர்களற்று இது நிகழ்கிறது. இடரென்று எனக்குத் தோன்றியது இரு வேறு இடங்களில்தாம். கருவூர்ச் சித்தரின் சிந்தையும் மயூரமுகியின் சிந்தையும்.
கருவூராரின் சிந்தையை எட்டித் தொட நான் முயற்சி செய்திருக்கிறேன். எனக்கு அது கூடவில்லை. அது பற்றி வருத்தமோ, வேறொன்றோ கிடையாது. என் கட்டமைப்பைத் தீர்மானம் செய்த ஆதித் தனிமம் அவரது கட்டமைப்பையும் அவ்வாறேதான் செய்திருக்கும். அதனைத் தகர்க்க நான் யார்? அல்லது வேறு யாரால்தான் கூடும்?











Add Comment