119. நச்சுப் பொன்
அதற்குமுன் எந்தப் பெண்ணின் சிந்தைக்குள்ளும் நான் ஊடுருவியதில்லை. ஆணென்றோ பெண்ணென்றோ பேடியென்றோ எனக்கு இனம் பிரித்துப் பார்க்கத் தோன்றுவதில்லை ஆயினும் மயூரமுகியின் சிந்தையைக் கருதிப் படர்ந்தபோது, நெருக்கடி மிக்க தருணங்களைப் பெண் மனம் எவ்விதமாக எதிர்கொள்கிறதென்று அறியும் ஆர்வம் சிறிது இருந்ததென நினைக்கிறேன். ஆனால் எல்லாம் சில மணித்துளிகளுக்குத்தான். மயூரமுகி, வேட்டனினும் உக்கிரமும் தீவிரமும் மிக்கவளாயிருந்தாள். எதற்கும் அவள் கலங்கவில்லை என்று சொல்ல இயலாது. ஆனால் வாழ்வில் எப்போதுமே அவள் நிலைகுலைந்து நின்றதில்லை என்பதைக் கண்டுகொண்டேன்.
மிகப்பல காலத்துக்கு முன்னர் கருவூர்ச் சித்தரின் ஆசிரமத்தில் அவள் சிறுபணி செய்துகொண்டிருந்தாள். சித்தர் உறங்கி அவள் என்றும் கண்டதில்லை. இருள் சூழும் நேரம்வரை ஆசிரமத்தில் தனது மாணாக்கர்களுடன் சல்லாபம் செய்துகொண்டும் அவர்களுக்கு போதித்துக்கொண்டும் இருப்பவர், அவர்கள் ஒவ்வொருவரும் புறப்பட்டுச் சென்றதும் அமர்ந்த நிலையிலேயே காணாமலாகிவிடுவார்.
மயூரமுகிக்கு முதலில் அவரது இவ்வழக்கம் அச்சம் தந்தது. ஆனால் சித்தர் தனது தவங்களை யாமப் பொழுதுகளில் மட்டுமே இயற்றுகிறார் என்றறிந்ததும் சிறிது நிம்மதி கொண்டாள்.











Add Comment