135. உறுப்பு
காலமற்ற காலத்தில் பெய்த மழை என்பதாலும் சிறிது நேரம் மட்டுமே பெரிதாகப் பெய்து, ஓய்ந்துவிட்டபடியாலும் மழை விட்டதிலிருந்து அந்தப் பாதையில் சென்ற அத்தனை பேரும் அது குறித்தே சல்லாபம் செய்துகொண்டு சென்றார்கள். அதைக் கவனித்த சார்வாகன், ஆர்வமுடன் தத்தனிடம் கேட்டான்,
இப்பெயலிலும் கோயிலில் கூட்டம் இருந்ததா?
ஆம் ஐயனே. நூறு பேருக்குக் குறைவில்லை.
வியப்புத்தான். உங்கள் காரோணத்துக்கு வரும் கூட்டம் எப்படி? அங்கும் இதைப் போலத்தானா அல்லது இன்னும் அதிகம் பேர் வருவார்களா?
முக்கியமான நாள், விரத நாள், பிரதோஷ நாள்களில் பலர் வருவார்கள். சாதாரண நாள்களில் இத்தனை கூட்டம் இருக்காது. அது பெரிதல்ல ஐயனே. இன்று கண்டது போலப் பெயல் இருக்குமானால் காரோணத்தில் சிவனும் சிவ பண்டிதர்களும் மட்டும்தான் இருப்பார்கள். வேரகத்துக்கு நான் எப்படி வந்தேன், எது என்னை இங்கே அழைத்து வந்ததென்று அறியேன். ஆனால் குடந்தை மக்களைக் காட்டிலும் இங்கு வசிப்போருக்கு பக்தி மிகுதி என்பதை அறிந்தேன்.
அப்படியா? உங்கள் சிவனைக் காட்டிலும் இவனுக்கு சக்தி அதிகமென்று தோன்றவில்லையா?
சிவசிவா. அப்படியெல்லாம் எனக்குத் தோன்றாது.











Add Comment