136. தீ வளர் சோதி
இருந்ததென்றும் இருக்கக் கூடியதென்றும் இல்லாது போனதென்றும் கடந்தது, கழிந்தது, நிகழ்வது, நேரவிருப்பதென்றும் யார் குறிப்பிடும்போதும் சிரித்துக்கொள்கிறேன். மனிதச் சிந்தை கட்டமைக்கும் எந்தச் சட்டகத்தினுள்ளும் அகப்படாத இரு பெரும் சூக்குமங்களுள் ஒன்றான காலம், எனக்குப் பிறகு ஆதித்தனிமத்தின் சிந்தைக்குள் கருவிருந்த ஓங்காரம் வெளிப்பட்ட பின்பு பிறந்த ஒன்று. அதனோடு ஒட்டி உதித்தது வெளி. வேண்டாம் இவற்றைச் சிந்திக்காதீர்கள். அது வெறும் நேர விரயத்தில் அந்தம் கொள்ளும். இந்தப் பெருங்கதைக்கு அது அவசியமற்றது. ஆயினும் இங்கே அதனைக் குறிப்பிட்டுச் சிரித்தது நானே. காரணமின்றிக் காரியமில்லை என்பதை என்றைக்குச் சார்வாகன் தனது நிதானத்தில் திரண்டெழுந்த உறுதியின் மீது நின்று ஏற்றானோ, அன்று முதல் அவனைக் காலத்தின் தூல சாட்சியங்களின் எதிரே வைத்து உற்று நோக்கிக்கொண்டிருக்கிறேன். இந்தச் சிரிப்பை அப்போது நேர்ந்த கண் சிமிட்டல்களுள் ஒன்றெனக் கொள்க.
தொள்ளாயிரத்திரண்டு புவிக் கிழமைகளுக்கு முன்னர் ஒரு காரி நாளின் அந்தி சாய்ந்த பொழுதில் தஞ்சப்புரியின் எல்லையைத் தொட்டு உள்நுழைந்து நிசும்பசூதனியின் ஆலயத்தின் முன் மண்டபத்துக்கு வந்து சேர்ந்ததும் அவன் பாரதாய தத்தனிடம் சொன்னான்,
இனி ஒருக்கால் இது என்னுடைய நிரந்தர வசிப்பிடமாகலாம். நீ என்னைக் காண விரும்பும்போதெல்லாம் குடந்தை மாநகரிலிருந்து தஞ்சப்புரிக்கு வர வேண்டியிருக்கும்.











Add Comment