138. இறந்து பிறந்து இறந்தவள்
அதே வனம். அதே தடாகத் துறை. அதே மரம். வேட்டன் தனது இருப்பிடத்திலிருந்து பெயர்வதே இல்லை என்று எண்ணிக்கொண்டேன். அம்மாய வனத்தில் அவனையும் அவன் அழைக்கும்போது மட்டும் வருகிற அவனது கூட்டத்தாரையும் தவிர வேறு எவரும் எப்போதும் இருப்பதில்லை என்பதை அறிவேன். பசியும் உறக்கமும் அற்றவன். உணவு உள்பட எதன் தேவையும் இல்லாதவன். முந்நூறாண்டுகளாகத் தவம் மட்டுமே இயற்றிக்கொண்டிருக்கிறான் என்று எண்ணிப் பார்க்க பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அவனது சிந்தைக்குள் புகும்தோறும் ஒளியற்ற ஒளியும் இருளற்ற இருளுமே எப்போதும் சூழ்ந்திருக்கக் காண்கிறேன். தவத்தில் தோய்ந்தவனின் சிந்தை அவ்வாறு இராது. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சார்வாகன் தவம் பழகுவதற்கு முன்னரும் அவனது சிந்தையைக் கருதி, அதனுள் இருந்திருக்கிறேன். அவன் தவம் பழகிய காலத்திலும், அதில் தேறித் தெளிந்த காலத்திலும் அங்கே நிலைகொண்டு இருந்திருக்கிறேன். ஒரு பொட்டலென அவனது சிந்தை இருந்த நாள்களில் ஆங்கே நாடிகள்வரை இறங்கி ஆழச் சுரண்டி எரியச் செய்யும் வினோத வெப்பமொன்று பைசாசம் போலச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும். தவத்தில் கனிந்த பிறகு அவனது சிந்தையில் அது இல்லை. மாறாக ஓர் ஒளியைக் கண்டேன். பரிதியைப் போன்றதோ, நிலவினை நிகர்த்ததோ அல்ல. தீபச் சுடர் போன்றதோ, விண்மீன்களைப் போன்றதோ அல்ல. முதற்பல் முளைத்த மதலையொன்று சிரிக்கும்போது வெளிப்படும் ஒளியை நிகர்த்தது அது.











Add Comment