ஒரு புத்தகம் என்ன செய்துவிட முடியுமோ, அதையே புக்பெட்டின் எழுத்துப் பயிற்சிக் கூடம் எனக்குச் செய்தது.
தினசரிகளில் தொலைந்து விடாமல், எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தீவிரமடைந்தது இந்த ஆண்டுதான். வாழ்வின் முக்கியத் தருணங்களை மறந்துவிடக் கூடாதென்றே எழுதத் தொடங்கினேன். தெரிந்தவர்கள் நான்கைந்து பேர், படித்துவிட்டு நல்லது என்பார்கள். அவ்வளவே இருந்தது எனது எழுத்துப் பரிசோதனை. இருந்தும் எழுத்து மட்டுமே என்னைத் தொடர்ந்து ஈர்த்தது.
அதற்கான முயற்சியாக பிப்ரவரி மாதம் ஆசிரியர் பாராவின் எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். நான் எழுதியதைப் படிக்கும் கொடுமையை அனுபவித்த என் நண்பர்தான், இப்படியாவது உருப்படு என்று இதில் சேரச்சொன்னார். எழுத்துலகை அறிமுகப்படுத்தினார் ஆசிரியர். எல்லாமே புதிதாக இருந்தது. அறிவியல் மாணவர் அகவுண்டன்சிக் கற்றுக் கொள்வதைப் போல. முதல் அதிர்ச்சி – ஒரு வாக்கியத்திற்கு ஏழு சொற்கள் போதும் என்றார். இதை எழுதக்கூட, எனக்கு எட்டு சொற்கள் தேவைப்படுகிறது. ஒரு பத்தியளவு வாக்கியம் எழுதிக் கொண்டிருந்தேன். அதை வாசித்தவர்களின் சிரமம், எனக்கு அப்போதுதான் உறைத்தது. வகுப்புகளில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்கள், சவாலாக இருந்தன. விறுவிறுப்பாக, ஆசிரியரின் புத்தகம் போலவே வகுப்புகளும் தொடங்கி முடிந்தன. ஒரு சுற்றுலா கட்டுரை முதன்முதலில் மெட்ராஸ் பேப்பரில் எனக்கு வாய்ப்பளித்தது.
Add Comment