28. அன்புள்ள அரசாங்கத்துக்கு…
கோகலே சார்வஜனிக் சபாவின் காலாண்டிதழில் கட்டுரைகள் எழுதிப் பழகியபிறகு, ரானடேவுக்கு அவர்மீது கூடுதல் நம்பிக்கை வந்தது, சபாவின் சார்பாக அரசாங்கத்துக்குக் கடிதங்கள், மற்ற ஆவணங்களை எழுதுகிற வேலையையும் அவரிடம் ஒப்படைத்தார்.
அப்போதெல்லாம் இந்தியப் பொது அமைப்புகள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இப்படித்தான் உரையாடவேண்டும் என்று ஒரு நெறிமுறை வகுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர்கள் அரசாங்கத்திடம் எதையாவது தெரிவிக்கவேண்டுமென்றால் அதற்குப் பலவிதமான விரிவான ஆவணங்களை எழுதி அனுப்புவார்கள். இவற்றை Memorials, Representations, Petitions, Memoranda, Letters என்று பல பெயர்களால் அழைத்தார்கள். இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் சில நுணுக்கமான வேறுபாடுகள் இருப்பினும், நாம் அவ்வளவு ஆழமாகச் செல்லவேண்டியதில்லை. இந்த ஆவணங்கள் அனைத்தையும் நாம் ‘விண்ணப்பங்கள்’ என்கிற பொதுச் சொல்லால் அழைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, சார்வஜனிக் சபா தன்னுடைய உறுப்பினர்கள் அல்லது தான் இயங்கும் பகுதியிலிருக்கிற பொதுமக்கள் எதிர்கொள்கிற ஒரு சிக்கலைப்பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்துத் தீர்வு காண விரும்பலாம், ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைக்க நினைக்கலாம், அன்றைய நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கோரலாம், அரசாங்கத்தின் அறிவிப்புகள், கொள்கைத் தீர்மானங்களை எதிர்த்துத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க எண்ணலாம். இதையெல்லாம் அவர்கள் நேரடியாகப் பிரிட்டிஷ் அலுவலர்களிடம் பேசமுடியாது, பேசக்கூடாது, விரிவான விண்ணப்பங்களை உருவாக்கி அனுப்புவதன்மூலம்தான் அவர்கள் அரசாங்கத்துடன் உரையாடமுடியும்.










Add Comment