அமெரிக்காவின் தென்கிழக்குக் கோடியில் உள்ள மாநிலம் ஃப்ளோரிடா. அதற்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவில் கரீபியன் கடல் உள்ளது. அங்கே கற்களைப் போலச் சிதறிக் கிடக்கும் பல நிலப்பரப்புகளில் ஒன்றுதான் ஹைத்தி. இந்நாட்டு மக்கள் ஐம்பது ஆண்டுகளாக நிம்மதி என்பதையே மறந்து தத்தளிக்கின்றனர். சொந்த நாட்டில் வாழ முடியாமல் ஆறில் ஒருவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அதே மக்கள், கனரக ஆயுதங்களைக் கொண்ட எல் சால்வடோர் ராணுவத்தை வணங்கி வரவேற்கின்றனர்.
ராணுவ வீரர்களும் அவர்களுக்கு ஹை-ஃபைவ் கொடுத்துவிட்டு, ஹைத்தியின் கால்பந்து விளையாட்டு அரங்கத்துக்குள் நுழைகின்றனர். ஹைத்தியில் நடக்கும் உள்நாட்டுப் போரில் கால்பந்து விளையாடவோ, அதைக் கண்டு மகிழவோ யாருக்கும் மனமில்லை. அட, அந்த அரங்கைச் சமூக விரோதக் கும்பல் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கொலைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் அல்லவா பயன்படுத்தி வருகிறது!
இன்று எல் சால்வடோர் ராணுவ வீரர்கள் அதைக் கைப்பற்றியுள்ளனர். ரோபோ நாய் ஒன்றில் ஆயுதங்களைப் பொருத்தி அரங்கை வலம்வரச் செய்தனர். அந்த ரோபோ நாய் மண்டை ஓடுகளையும் மனிதச் சடலங்களையும் கண்டுபிடித்தது. இனி ஆயுதக் கும்பலுடனான போர் முடியும் வரை விளையாட்டு அரங்கம் ராணுவத் தளமாகப் பயன்படும் என்று எல் சால்வடோர் ராணுவம் கூறிவிட்டது.















Add Comment