235. பிரதமர் ராஜீவ்
இனியும் சோனியா காந்தியுடன் ராஜீவை விட்டு வைத்தால் காரியம் கெட்டுவிடும் என்று பி.சி. அலெக்சாண்டர் அவரை நெருங்கி, ‘கொஞ்சம் இப்படி வாருங்கள்’ என்று சொல்லி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
‘நாடே உங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது! திட்டமிட்டபடி பதவிப் பிரமாணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது! ‘ என்று அவர் சொல்லவும், ‘நான் வீட்டுக்குச் சென்று, உடை மாற்றிக் கொண்டு, சரியாக ஆறு மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு வந்து விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு ராஜீவ் காந்தி விடைபெற்றார்.
ஏமன் நாட்டிலிருந்து அவசர அவசரமாகத் திரும்பிய ஜனாதிபதி ஜெயில்சிங்கின் விமானம், மாலை ஐந்து மணிக்கு டெல்லி வந்திறங்கியது.
அருண் நேருவும் ஆர்.கே. தவானும் விமான நிலையம் சென்று அவரைச் சந்தித்தார்கள். ‘ராஜீவ் காந்திதான் அடுத்த பிரதமர் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டியதுதான் உங்கள் வேலை’ என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
விமான நிலையத்தில் இருந்து அவர்கள் மூவரும் நேராக எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.















Add Comment