இமாசல பிரதேசத்தில் ஓரிடம். ஏதோ ஒரு தொகுதி, ஒரு வார்டு. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதில் கவலையடைந்த கவுன்சிலர் பிட்டு பண்ணா, தனது வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். பல வீடுகள் மழையில் சேதமடைந்திருந்தன. ஏராளமான விரிசல்கள். உடனே ரிப்பேர் செய்யுங்கள்; இல்லாவிட்டால் பிரச்னையாகும் என்று கவுன்சிலர் மக்களை எச்சரிக்கிறார். கொட்டும் மழையில் எங்கிருந்து வீடு ரிப்பேர் செய்ய முடியும்? எனவே, மழை விட்டதும் பார்த்துக்கொள்ளலாம் என்று மக்கள் சும்மா இருந்தார்கள்.
ஆனால் மழை விடுகிற விதமாக இல்லை. விரிசல்களும் பெருகிக்கொண்டே சென்றன.
இப்போது மக்கள் அச்சப்படத் தொடங்கினார்கள். எந்த வீடும், எக்கணத்திலும் நொறுங்கி விழலாம் என்று எல்லோருக்குமே தெரிந்தது. எனவே கவுன்சிலரிடமே சரணடைந்தார்கள்.
ஏதாவது செய்யுங்கள்.
பிட்டு பண்ணா, மாற்று இடம் ஏற்பாடு செய்து அப்பகுதியிலிருந்த மக்களை அப்புறப்படுத்துகிறார்.
அது சந்தேகமின்றி தெய்வச் செயல்தான். ஏனெனில், மக்கள் அனைவரையும் பாதுகாப்பான வேறிடத்துக்கு அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே அங்கிருந்த அனைத்து வீடுகளும் நொறுங்கி விழுகின்றன. மலைச்சரிவில் மழை வெள்ளத்தில் நொறுங்கி விழும் வீடுகள், நீரோடு அடித்துச் செல்லப்படும் பொருள்கள் அனைத்தையும் உரியவர்களே மொபைலில் விடியோ எடுத்தபடி வருந்திக் கதறிய காட்சி, பார்த்த அனைவரையும் உருக்கியது.
ஆனால் போனது போனதுதான். உயிராவது மிஞ்சியது குறித்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். மாநிலம் முழுதும் மக்கள் அங்கே இப்போது நிவாரணத்திற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
Add Comment