இந்தியா சுதந்தரம் பெற்ற ஆண்டு 1947. அதற்கு அரை நூற்றாண்டு முன்பே நாட்டில் ஆட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதுதான் 1895ஆம் ஆண்டு உருவான ‘Constitution of India Bill’, அதாவது ஸ்வராஜ் சட்டம்.
இந்த அரசியலமைப்பு மசோதாவின் ஆசிரியர் யார் என்பது இன்றும் தெரியவில்லை. இதன் பின்னணியில் இயங்கிய சக்தி பாலகங்காதர திலகர் என்று அன்னி பெசன்ட் அம்மையார் கூறுகிறார்.
‘ஸ்வராஜ்ஜியம் என் பிறப்புரிமை, அதை நான் பெற்றே தீருவேன்!” என்றார் திலகர். ஆங்கிலேய ஆட்சியின் கீழே இருந்தாலும் சுயாட்சி வேண்டும் என்ற குரல் வலுப்பெற்றபோது வந்தது இந்த மசோதா. 110 பிரிவுகளைக் கொண்டது இந்த ஆவணம். நாட்டுக்கு வேண்டிய அனைத்து அடிப்படைகளையும் உள்ளடக்கிய முழுமையான வரைவு இது.
இதன்படி, இந்திய சுயாட்சி என்பது இறையாண்மை (Sovereign Power), சட்டமியற்றும் அதிகாரம் (Legislative Power), நீதிப் பரிபாலனம் (Judicial Power), நிர்வாக அமலாக்கம் (Executive Power) என நான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்த நான்கும் தனித்தனியானவை.
மசோதாவில் மக்களுக்கான பல தனித்துவமான சுதந்தரங்கள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள் கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம், சொத்துரிமை, இலவசக் கல்வி போன்றவை முக்கியமானவை. அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் குறை சொல்லலாம். அனுமதியின்றி யாரும் இன்னொருவர் வீட்டுக்குள் நுழைய முடியாது. சட்டப்படி நிரூபிக்கப்படாமல் யாரையும் சிறையிடவோ, சந்தேகத்தின் பேரில் கைது செய்யவோ முடியாது.
இம்மசோதாவின்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஆயுதம் தாங்கி நாட்டைக் காக்கக் கடமைப்பட்டுள்ளான். ‘உனக்குச் சுதந்தரம் வேண்டுமா? அதைக் காக்கவும் நீயே தயாராக இரு’ என்ற செய்தி இதில் இருக்கிறது.
1895இல் உருவானது இந்த மசோதா. பிறகு வந்த Commonwealth of India Bill மற்றும் நேரு அறிக்கைக்கும் இதுவே முன்னோடி. இதில் செய்யப்பட்ட மாற்றங்களின் உச்சமே இன்றைய இந்திய இறையாண்மை. இந்த உரிமைகளை இப்போதிருக்கும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், திலகரின் சிந்தனை எவ்வளவு முன்னோடியானது என்று தெளிவாகும்.
பத்மா அர்விந்த்
padma.arvind@gmail.com















Add Comment