இன்று
நீலமலைகள் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் முற்றிலும் மனிதன் அணுகமுடியாத பிரதேசமாக இருந்தன. பழங்குடியினரும் மலைவாசியினரும் குகைகளிலும் வனங்களிலும் மறைந்து வாழ்ந்திருந்தனர். தொல்குடியினரின் குகைச் சித்திரங்களின் வழி மனிதவாழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கிருந்ததைச் சொல்கிறது. அரச குடியினர் சிலர் மலையை வென்றெடுத்திருந்தபோதும், அதனை முழுவதுமாக ஆக்கிரமிக்கவோ சென்று வாழவோ முயற்சி எடுக்கவில்லை. அச்சம் காரணமாக இருக்கலாம், அல்லது உள்ளதை ஆட்சி செய்தால் போதும் என்ற நிறைவு காரணமாக இருக்கலாம். தேவை எதுவும் ஏற்படாத சாதாரணக் காரணமாகக் கூட இருக்கக்கூடும்.
பிரிட்டிஷ் வந்த காலத்தில்கூட மலைகளை ஏறி வளைக்கிற கனவு ஒரே ஒருவனுக்குத்தான் வந்திருக்கிறது. மற்றவர்களெல்லாம் உள்ளதைக்கொண்டு நல்லது செய்கிற, பெருங்கனவுகள் ஏதுமில்லாத அதிகாரிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். விஷ், கிண்டர்ஸ்லி என்கிற இளம் பிரிட்டிஷ் சர்வேயர்கள் மலையேறிக்கொண்டு வந்த முதல் ஆவணம், வெறும் ஆய்வு ஆவணம் என்ற பெயரிலேயே அடுத்த நூற்றாண்டு வரைக்கும் தேங்கியிருக்கும். பொருளாதாரச் சூழலைக் கைகாட்டி வேறு எந்த நிர்வாக அதிகாரியும் மலை மீது ஏறும் திட்டத்தை முன்மொழிந்திருக்கமாட்டார்.
ஜான் சல்லிவன் என்கிற அகன்ற பார்வையும், தீவிரச் சிந்தனையும், வருங்காலத்தைப் பற்றிய கனவும் கொண்ட ஒரு தலைவன் வந்த பிறகு அது மாறுகிறது. அத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மிகச்சில மனிதர்கள் மட்டுமே கால் பதித்த அந்தக் கன்னி நிலத்தின்மீது ஆயிரமாயிரம் காலடிகள் வந்து போக அது அனுமதியளிக்கிறது. சற்றே நெகிழ்ந்துகொடுக்கிறது.















Add Comment