108 நினைவுக்கு
‘படிக்கிறவா இதை ரொம்ப நாளைக்கு ஞாபகம் வெச்சிண்டிருப்பா. ரொம்ப நாளைக்கு இந்தக் கதையோட உங்களை ஐடண்டிஃபை பண்ணிப்பா.’
என்று வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் பெரிய முகம் பாராட்டு முறுவலுடன் விகசித்தது. அதைப் பார்த்ததே கதையைப் படித்துக் காட்டி முடித்திருந்த இவனுக்கு, ஜன்ம சாபல்யம் அடைந்ததைப்போல் இருந்தது. இதைவிட என்ன வேண்டும், இனி எவன் சொன்னால் என்ன சொல்லாமல் போனால்தான் என்ன என்று உச்சி மண்டை சிலிர்க்க உள்ளூர துள்ளிக்குதித்துக்கொண்டு இருந்தான்.
குமிழியிட்ட மகிழ்ச்சியுடன் கூடிய கூச்சத்தில், அவருக்கு என்ன சொல்வது என்றே இவனுக்குப் பிடிபடவில்லை.
‘எதுக்கு அனுப்பப்போறேள்.’
‘அனுப்பறதா. இன்னும் எழுதியே முடிக்கலையே.’
‘இதுக்கு மேல எழுத இதுல என்ன இருக்கு.’
‘ஐயையோ இது வெறும் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டுதான. இன்னும் ஏழுதடவையாவது எழுதணும்.
திரும்பவும் முறுவலித்துக்கொண்டார். ஆனால் இந்த முறை எதுவும் சொல்லவில்லை. சுவரில் சாய்ந்து இருந்தவரின் பார்வை கீழே இருந்த பாயையே வெறித்துக்கொண்டு இருந்தது. சுட்டுவிரல் தன்பாட்டிற்கு காற்றில் எதையோ எழுதிக்கொண்டிருந்தது. படுத்தபடி இவன் படிப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் எப்போது எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார் என்றே தெரியவில்லை.
Add Comment