80 நிறையும் குறையும்
எழுதியதைப் படிக்கப் படிக்க இனி கையே வைக்கவேண்டாம் என்கிற அளவுக்குத் திருப்தியாக இருந்தது. அப்படியே தூக்கி தூர வைத்துவிட்டான். இது ஆபத்து. எழுதியது நிறைவைத் தருவதைப்போல வேறு எதுவும் அவனுக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால், மகிழ்ச்சியில் துள்ளியபடி படித்தால் குறைகள் தெரியாது என்பதால் ஐந்தாவது முறையாக நகல் எடுத்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அம்மாவை எழுப்பிவிடாதவாறு அரவமின்றி வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியில் வந்தான்.
அதிகாலை மூன்று மூன்றரை இருக்கலாம் என தோன்றியது. கேகே நகர் டெப்போவுக்கு எதிரிலிருந்த குட்டி ரவுண்ட்டாணா அமைதியாக இருந்தது. எப்போதும் ஜொலித்துக்கொண்டு இருக்கிற சரவணபவன் இருளோடிக் கிடந்தது. எதிரில் தூங்கிக்கொண்டிருந்த நாய் தலையைக் கூடத் தூக்காமல் லேசாகக் கண் திறந்து நீதானா என்பதைப்போல யார்த்துவிட்டு அசுவாரசியமாய் தூக்கத்தைத் தொடர்ந்தது தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது.
பொதுவாகத் தெருநாய்கள் ஜிப்பாவைப் பார்த்தால் குரைக்கும். சைக்கிளில் போகும்போது குரைத்தபடித் துறத்திக்கொண்டுவேறு வரும். அப்போதெல்லாம் அவன் சிறுவயதைப் போல காலைத் தூக்கிக் காரில் மோதிக்கொள்ளாமல், படக்கென பிரேக் அடித்துக் காலைத் தரையில் ஊன்றிக்கொண்டு நின்று நாய்க்கு சரிக்கு சரியாய் சத்தமாக ஏய் என்று கத்துவான். குறைக்கிற நாய் இது என்ன நம்மைப் போலவே குரைக்கிறதே என்கிற அதிர்ச்சியில் விலுக்கென்று ஜகா வாங்கி க்ர்ர்ர் என கருவிக்கொண்டு நிற்கும். நான் ஞாநியில்லை என்று சொல்லி உரக்கக் கத்தியதும் ரொம்பப் புரிந்ததைப் போல அமைதியாகப் போய்விடும்.
Add Comment