84 ஆதியும் மீதியும்
புத்தகம் முடிந்தேவிடும் நிலையில் இருக்கையில், ‘புக்கு நல்லா வரும்ங்க’ என்று நம்பியே சொல்லிவிட்டது கொஞ்சம் தெம்பாக இருந்தாலும் அட்டை இன்னும் வராதது பெரிய டென்ஷனாக இருந்தது. எல்லாம் சரியாக நடக்கவேண்டுமே என்கிற சஞ்சலத்திலேயே சதாகாலமும் உழன்றுகொண்டு இருப்பவனுக்கு, இன்னும் அட்டையைத் தராமல் இழுத்தடிக்கும் ஆதிமூலம் மேல் எரிச்சல் எரிச்சலாக வந்தது. என்ன இவர் இப்படிச் செய்கிறார். என்ன அன்பாக நடந்துகொண்டு என்ன பிரயோஜனம். ஏன் இப்படி இழுத்தடிக்கிறார். எப்போதுதான் முடித்துக்கொடுப்பார். இன்று இரண்டிலொன்று கேட்டேவிடுவது என்று வேகமாக பெஸண்ட்நகருக்கு சைக்கிளை விட்டான் – அந்த அட்டையில்தான் அவனுக்குப் பெரிய தலைவலியே யே காத்திருக்கிறது என்பதை அறியாமல். ஆனால், பாவம் ஆதிமூலத்திற்கும் அவனுக்கு வரவிருக்கிற மண்டையிடிக்கும் சம்பந்தமேயில்லை என்பதுதான் நிஜம்.
ஆதி எவ்வளவு பெரிய ஆள். அவர் நமக்கு அட்டை பண்ணித்தருகிறேன் என்று ஒப்புக்கொண்டதே பெரிய விஷயமில்லையா. கசடதபற காலத்தில் நட்சத்திரமாக ஜொலித்தவரல்லவா. அதற்காக இப்படியா இழுத்தடிப்பது. செல்லப்பெயர் வைத்துக் கொஞ்சிவிட்டால் போதுமா. கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டாமா. சொன்ன நேரத்திற்குக் கொடுக்கவேண்டாமா. இவர் கொடுத்த பிறகு எவ்வளவு வேலை இருக்கிறது.
அட்டையை, நடேஷ் ஸ்கிரீன் பிரிண்ட்டிங்கில் தானே போட்டுத் தருவதாய்க் கூறியிருந்தான். ‘என்னா மாமே’ என்று தடிமாடுபோல கூவியபடி, அப்பா ந முத்துசாமி போலவே நெஞ்சைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெரிய வஸ்தாதுபோல வருபவன். அவர் மீசையை சதா உருவி விட்டுக்கொண்டே இருப்பார் என்றால் இவனுக்கு மீசை என்று ஒன்று இருக்கும் அவ்வளவுதான். அதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம். கொழுக் மொழுக்கென்று இருக்கிற குண்டு குழந்தை.
Add Comment