82 தெளிவு
வருவதாய்ச் சொன்ன தேதிக்கு சரியாக ஒரு வாரம் தள்ளி வந்தான் சுகுமாரன். அவனைப் பார்த்ததுமே டபக்கென ஜோல்னா பையில் இருந்து வெளியில் குதித்தது நாற்காலிக் கதை.
‘ஹூம்’ என்று முறுவலித்தபடி, ‘கதையா’ என்றான்.
‘நா வேற என்னத்தக் குடுக்கப்போறேன்.’
‘உன்னைப் பாத்தாலே உற்சாகமா இருக்கு’ என்றான்.
சரி சரி அதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல கதையைப் படி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவனாய் அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தான்.
மடித்திருந்த பேப்பர்களைப் பிரித்து, கதையின் தலைப்பைப் பார்த்ததுமே இன்னொரு ‘ஹூம்’ என்றபடி புருவங்கள் தூக்கின. இதுவே போதும் நிச்சயம் இவனுக்குப் பிடித்துவிடும் என்பதற்கு என்று தோன்றிற்று.
இருப்புக் கொள்ளாமல் எழுந்தான். சிகரெட் பற்றவைத்துக்கொண்டு அறைக் கதவை அடுத்திருந்த சிவப்புத் தரை கொண்ட மொட்டை மாடிக்குப் போனான். திண்டு போல மொழுக்கென இருந்த மதில் சுவரில், சுண்னாம்பு திப்பித்திப்பியாய் போய் உள்ளிருக்கும் செம்மண் கறையான்களைப் போல காட்சியளித்தது லாட்ஜின் குட்டைச் சுவர். அதன் கீழே, ஷாமியானாவுக்கு அடியில் இயங்கிக்கொண்டிருந்தது சாந்தி விகார் ஓட்டல். அங்கிருந்து பார்க்க ஷாமியான கலர் கலர் குடைகளைக் கட்டிப்போட்டு செம்மண்ணில் நட்டு வைத்தாற்போலத் தெரிந்தது.
Add Comment