54 சுயநலம்
இரவு செண்ட்ரலில் கால் வைத்ததுமே, வண்டியில் உட்காரவாவது இடம் கிடைக்க வேண்டுமே என்கிற பதைப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. பிளாட்பாரத்தில் அவன் நடந்த நடையிலேயே அது வெளிப்பட்டிருக்கவேண்டும். இன்னும் விளக்குகூடப் போடாமல் இருட்டாக இருந்த வண்டி அப்போதுதான் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தது.
“சீட் ஓணுமா” என்று திடீரென முளைத்தவன் போல, எதிரில் வந்து கேட்டான், தோளில் பித்தளை வில்லை கட்டியிருந்த போர்ட்டர். இவன் “ஆமாம்” என்று சொல்லும்போதே, செண்ட்ரலிலேயே வாழ்கிற இதுபோன்ற பாத்திரங்களை வைத்து ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட, எப்போதோ படித்த பி.வி.ஆரின் ‘செண்ட்ரல்’ நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டான்.
“உனக்கின்னா ஒருநாள் வந்துட்டுப்போறே சிரிக்கிறே. இங்க எங்கப் பொயப்பு நெதொம் சிரிப்பா சிரிக்கிறது எங்குளுக்குதான தெரியும்” என்றபடி, அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டின் மரக்கட்டை பெஞ்சில் ஜன்னலில் இருந்து நீளமாகத் தான் போட்டிருந்த சிவப்புத் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டான்.
“அட உன்னைப் பாத்து சிரிக்கலப்பா நீ வேற” என்றபடியே இரண்டு ரூபாய் நோட்டை பாண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான்.
Add Comment