124. ஃபெரோஸ் மரணம்
காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனதும் இந்திரா கட்சியின் காரியக் கமிட்டியில் இருந்து தன் தந்தை நேருவை நீக்கிவிட்டார். இது ஒரு ஸ்டன்ட் என்றால் அது மிகையில்லை.
காரணம், காரியக் கமிட்டி உறுப்பினர் என்ற அந்தஸ்த்து இல்லாது போனாலும் நேருவுக்கு, காரியக் கமிட்டிக் கூட்டங்களுக்கு நிரந்தர அழைப்பாளர் என்ற புதிய அந்தஸ்தினைக் கொடுத்தார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் ஒன்றுக்கு கட்சித் தலைவராக இந்திரா தலைமை தாங்கியபோது, அதில் கலந்துகொண்ட நேரு, “முதலில் இந்திரா எனக்கு ஒரு சிநேகிதியாக இருந்தார்; அதன் பின் ஆலோசகர் ஆனார்; இப்போது எனக்குத் தலைவர் ஆகிவிட்டார்” என்று சொன்னார்.
கட்சித் தலைவர் என்ற புதிய, பெரிய பொறுப்பு வந்ததும் இந்திரா மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கினார். நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். அதுவரை பெரிய தலைவர்கள் யாரும் செல்லாத ஊர்களுக்கெல்லாம் சென்று கட்சிக்காரர்களையும், பொது மக்களையும் சந்தித்தார்.
இளைஞர்களை அழைத்து, “நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம்! இந்தியாவின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! செயல் படத் தொடங்குங்கள்!” என்று அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார். அவர்களுக்கு இந்தியாவின் எதிர்காலம் பற்றியும், அவர்களின் எதிர்காலம் பற்றியும் நம்பிக்கை ஊட்டினார்.
Add Comment