126. சுதந்திரா கட்சி
தந்தை ஃபெரோஸ் காந்தியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ராஜிவ், சஞ்சய் இருவரும் தங்களது டேராடூன் பள்ளிக்குத் திரும்பிய பிறகு இந்திரா மிகவும் தனிமையாக உணர்ந்தார். அப்போது அவர் ராஜிவுக்கு ஒரு கடிதம் எழுதி தன் சோகச் சுமைகளைப் பகிர்ந்துகொண்டார்.
“(ஃபெரோசின் மறைவால் ஏற்பட்ட) அதிர்ச்சியில் என்னால் அழக்கூட முடியவில்லை. ஆனால், இப்பொழுதோ என்னால் அழுவதை நிறுத்த முடியவில்லை. எதிர்காலமே இருண்டதாகத் தெரிகிறது.
நாம் அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பமாக வாழலாம் என்று முடிவு எடுத்த சமயத்தில் இப்படி ஆகிவிட்டதே! ஒரு மகனாக உன்னுடைய இழப்பையும். வருத்தத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், உன்னால் என் துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. என்னை இரண்டாகப் பிளந்ததுபோல் உணர்கிறேன்.
ஒரு விஷயத்தில் ‘நீ உன் அப்பாவைப் போலவே நடந்து கொள்கிறாய். எந்த விஷயத்தையும் உனக்குள்ளாகவே பூட்டி வைத்துக் கொள்கிறாய். என்னிடம் சொன்னால்தானே எனக்கும் புரியும்? சொல்லாமலே எனக்கு எவ்விதம் தெரியும்?
இந்த குணத்தினால்தான் எனக்கும், உன் அப்பாவிற்கும் தேவை இல்லாத இடைவெளி விழுந்துவிட்டது. என்ன செய்வது, போனது போனதுதானே?”
Add Comment