150. மாடல் மருமகள்
சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரதம மந்திரிக்கே அவருடைய மகன் குறித்து குறை சொல்லி, டூன் பள்ளி நிர்வாகம் எழுதிய கடிதம் இந்திரா காந்தியின் பார்வைக்குச் சென்றது.
சிறிது நேரம் அந்தக் கடிதத்தையே பார்த்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்த வினாடி சஞ்சய் விஷயத்தில் ஒரு முடிவு எடுத்துவிட்டார்.
“சஞ்சய் டூன் ஸ்கூலில் படித்தது போதும்! இனி அவன் டெல்லியிலேயே படிக்கட்டும்!”
இந்திரா காந்தியின் முடிவு டூன் பள்ளிக்குத் தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் மார்டின் அதிர்ச்சி அடைந்தார்.
“சஞ்சயை பள்ளியிலிருந்து நீக்க நாம் முடிவு செய்யவில்லை; இது முழுக்க முழுக்க பிரதமரது முடிவு! பிரச்னையை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்று, தீர்வு காண அவரது உதவியை நாடினோம். அவ்வளவுதான்!” என்று தலைமை ஆசிரியர் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு, மற்ற ஆசிரியர்களையும் சமாதானப்படுத்தினார்.
ஆனால் உண்மையில் சஞ்சய் டெல்லிக்கு அழைத்துவரப்படுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன. முதலாவது, ராஜிவ் வெளிநாடு சென்ற பின், சஞ்சய்க்கு டூன் ஸ்கூல் பிடிக்கவில்லை. டெல்லிக்கு வர விரும்பினான். இதை தன் தாயிடம் சஞ்சய் பலமுறை சொன்னதுண்டு.
Add Comment